Show all

ஆ.ராசா பேசியது- பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்களே. தற்போது தூசு தட்டினார் ஆ.ராசா

பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்ளைத் தற்போது தூசு தட்டி, திமுக பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசுகிறார். இது, தமிழ்நாடு பாஜக கிளையினருக்கு தாங்கள் அறிந்திராத புதுமையாகத் தென்படுகிறது.

01,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: திமுக உள்ளிட்ட, திராவிட இயக்கங்கள் சமூகநீதி நிலைநாட்டலுக்காக பல பதின் ஆண்டுகளாக முன்னெடுத்துவந்த கருத்துக்ளை தற்போது தூசு தட்டி, திமுக பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசியது தமிழ்நாடு பாஜக கிளையினருக்கு தாங்கள் அறிந்திராத புதுமையாகத் தென்படுகிறது. கொந்தளிக்கிறார்கள்; சிலர் அடாவடியிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி தெரிவித்ததான செய்தியாவது- இந்தியாவில் இல்லாத ஒன்றை ஆ.ராசா பேசவில்லை. ஆரிய இதிகாசங்களில், தொல்கதைகளில் இருப்பதைதான் பேசியிருக்கிறார். கட்டுக் கதைகளை வாழ்வியலாக்கி விட்டனர். தெய்வங்களின் பெயரில் மூடநம்பிக்கைகளையும், சாதிய தீண்டாமையைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் திமுக செயல்படுகிறது. அனைவரும் ஒரே தெய்வத்தை வழிப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்தான் கோயில் உள்ளே செல்ல முடிகிறது. இந்த தீண்டாமையின் பிறப்பிடத்தை ஒழிக்க வேண்டும்.

2,000 ஆண்டுகளாக இருந்த வழக்கத்தை ஒழித்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை கொண்டு வந்தாலும், ஆகமவிதிகளில்படிதான் கோயில் இயங்க வேண்டும் என்று வழக்கு போடுகிறார்கள். 188 ஆண்டுகளுக்கு முன்னமே, அன்னியராட்சியான பிரித்தானியரே அங்கீகரித்து கொண்டு வந்த கல்வி முறையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களால் கல்வி பயில 150 ஆண்டுக்கால போராட்டம் தேவைப்பட்டது. 

வெளிநாடுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிற வேற்றுமை இருக்கிறது. ஆனால், ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்று எங்குமில்லை. தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று புத்தகத்தில் அச்சடிக்கும் அளவுக்கு, தீண்டாமை இங்கு வாழ்வியல் ஆக்கப்பட்டுள்ளது.

வைதீக வழிபாடு மூலம்தான் தீண்டாமை இங்கு வந்தது. இந்தியாவின் இந்து சட்டத்தில் பிரிவு 3-ல் ஆ.ராசா பேசியது அப்படியே இருக்கிறது. இந்தத் தீண்டாமை விடையங்களை பொதுவெளியில் பேசிக் கொண்டே இருந்ததால் மக்கள் மனது மாறும். மக்கள் மனமாற்றம் ஆகிவிடக்கூடாது என்பதில் பாஜக போன்ற அமைப்புகள் தீவிரமாக இருக்கின்றன. அதனால்தான் அதை சர்ச்சையாக்க பார்க்கிறார்கள் என்பதாகும்.

உண்மையில், பாஜகவின் மேல்சாதி ஆதிக்க வெறியின் மீதான தமிழ்நாட்டு மக்களின் மிகச்சரியான புரிதலை மேம்படுத்துவதற்கே இந்த பாஜகவினரின் தேவையற்ற சர்ச்சை பயனாகும் என்கிற செய்தியை பாஜகவினர் புரிந்து கொள்வதாக இல்லை. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதுதான் அமையும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,375.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.