Show all

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முழக்கம்! நீட், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது.

நீட், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும். எந்த படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவில்  முழக்கம்.

02,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா  பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கியது. ஒன்றிய அரசு நியமித்த தமிழ்நாட்டுக்கான ஆளுநர் ரவி தலைமையில் விழா முன்னெடுக்கப்பட்டது.  

இந்த விழாவில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.  

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பேசிய  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி- 

இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும், நலங்கும் இரு கண்கள் என உறுதியாக இருப்பவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். நீட் விலக்கு சட்ட முன்வரைவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி. 

கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன். நீட் பயிற்சி மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக உள்ளது நீட்தேர்வு. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குத்தாம் அவை வழி வகுக்கும்.  

நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது . 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும். எந்தப் படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது. மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில்  கல்வி இன்னும் வளரும். அதனால் தான் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம். 

என்று அழுத்தம் திருத்தமாக, நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வும் வேண்டாமெனவும் அந்த வகைக்கு செயலாற்ற மாநில உரிமையில் கல்வி இருக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு நியமித்த தமிழ்நாட்டுக்கான ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அறிவுறுத்தும் வகையில், அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது பாராட்டு பெற்று வருகிறது. 

இது மீண்டும் பேரறிஞர் அண்ணா காலத்து எழுச்சியை நினைவூட்டுவதாக தமிழ் ஆர்வலர்களால் பாராட்டி, அந்த பழைய நினைவுகள் மீட்டப்பட்டு வருகிறது.

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடல் வரிகள் மிகவும் கொண்டாட்டப்பாடான காலம் அது. இக்கவிதையை மேற்கோள் காட்டிப் பேசாத திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பல மேடைகளில் இந்த பாட்டுவரிகளை சொல்லிக் காட்டியிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு மிகவும் பிடித்த கவிதை இது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,250.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.