Show all

இந்திரா மூட்டிய தீயில் மோடி குளிர்காய்கிற முயற்சிதான் நீட்

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விடுதலை கட்சிகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று நீட் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில் 60 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி இழந்துள்ளனர். தமிழக மருத்துவப் பல்கலை கழகங்களில், கல்லூரிகளில் தமிழ் தெரியாத, அயல் மாநில, 60 விழுக்காடு மாணவர்கள் மருத்துவர்களாவார்கள். 

மருத்துவக் கனவில் இருந்த, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் நீட் பிரச்சனை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்:

1950-ல் கொண்டுவரப்பட்ட புதிய இந்திய அரசியல் அமைப்பில் கல்வி மாநிலப் பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருந்தது. அந்த நிலையே நீடிக்க வேண்டுமென அனைத்துக் கல்விக் குழுக்களும் கூறியதை அப்போதைய பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டார். அவருக்குப்பிறகு வந்த இந்திராகாந்தியால்  1976- ல் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையின்போது, 26 ஆண்டு காலம் நடைமுறையில் இருந்த கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

அதனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வியைச் சேர்க்க வேண்டும். இதைச்செய்யாமல், தமிழக அரசு தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வருவது கல்வித்தரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது. பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாற்ற வேண்டும். நீட் பிரச்னைக்கு அதுமட்டுமே தீர்வு.

மருத்துவக்கல்வியில் நாட்டில் முதலிடத்தில் இருந்தது தமிழகம். நீட் தேர்வால் தற்போது தமிழகம் கடைசி இடத்துக்கு சென்றுள்ளது.

தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு எதிரான சதி இது. அவசரமாக தேர்வு முடிவு வெளியிடப்பட்டது திட்டமிட்ட சதி. தமிழக அரசு எந்த அக்கறையும் இல்லாமல் நடுவண் அரசின் சதிக்கு துணைபோகிறது. இந்த நீட் பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும், என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அனிதா மரணத்தை முன் வைத்து கி.வீரமணி அவர்கள் இதே கருத்தை கடந்த ஆண்டே வலியுறுத்தியிருந்தார்: கல்வித் துறையில், 1976ல் நெருக்கடி காலத்தில் இரவோடு இரவாக கள்வர் நுழைந்து பொருளைக் கொள்ளையடித்துச் செல்வது போல, இந்திய அரசியல் சட்டத்தின் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டதன் தீய விளைவே, நமக்கு இப்படி பல்வேறு அறிவு, கல்வி வளர்ச்சித் தடைகள். தமிழ்நாடு முதலமைச்சர் இதில் மற்ற மாநில முதலமைச்சர்களையெல்லாம் அழைத்து ஒரு மாநாடாக தமிழ்நாட்டில் கூட்டி, மாநிலப் பட்டியலுக்கே மறுபடியும் கல்வியை திரும்பக் கொணர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திடுவது மிகவும் அவசரம் ஆகும்.

இதே போல கடந்த ஆண்டு- 

நீட் விவகாரத்தில் கட்சி அரசியலை கடந்து சென்னையில் லட்சக்கணக்கில் திரண்டு பொதுமக்கள் போராட வேண்டும் என்று தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்:

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களைப் பாதிக்கக்கூடிய மிக முதன்மையான பிரச்சினைகளில் கூட ஒரே களத்தில் ஒன்றுபட்டு நின்று ஓங்கிக் குரல் கொடுத்ததே இல்லை. எந்த பிரச்சினையிலும் அதிகார பீடத்தைக் குறிவைக்கும் ஆதாய அரசியல் அணுகு முறைதான் இங்கே அன்றாடம் அரங்கேறி வருகிறது. 'நீட்' பிரச்சினையில் நடுவண் மாநில அரசுகள் நம் ஏழை எளிய கிராமப்புற மாணவச் சமுதாயத்திற்கு இழைத்திருக்கும் அநீதி எந்த வகையிலும் மன்னிக்கக் கூடியதன்று. கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

மண் சார்ந்த கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி என்ற இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சற்றும் ஒத்துவராத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்த முயலும் மோடி அரசின் மறை முகச் செயல் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக மேடை போட்டு முழங்குவதை நிறுத்தி விட்டு ஆளும் அதிமுக உள்பட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் பொது மக்களும் ஒன்று கூடி அற வழியில் போராட முற்பட வேண்டும். மக்கள் தங்கள் நலனைப் பாதுகாக்க பெருந்திரளாகக் கூடிக் குரல் கொடுப்பது மக்களாட்சி அரசியல் தந்திருக்கும் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைப் பாதுகாப்பது அறங்கூற்றுமன்றத்தின் கடமையாகும். இதில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கு இடம் இருக்க வாய்ப்பில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதால் தான் இன்று மோடி அரசு கல்வித் துறையில் முடிந்த வரை மூக்கை நீட்ட முடிகிறது.

தி.மு.க. 14 ஆண்டுகள் நடுவண் அரசில் இடம் பெற்றிருந்த போதிலும், முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கலைஞரின் தயவால் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த போதும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற எந்த வலிமையான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழக முதல்வராக இருந்த போதும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற எந்தத் தீவிர நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.

இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்தப் பிரச்சினையில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவை தான் என்பது கசப்பான உண்மை. இப்போதாவது ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதைத் தவிர்த்து, கட்சி அரசியலைக் கடந்து அனைத்துக் கட்சித் தொண்டர்களும் சமூக நலனில் நாட்டமுற்ற பொது மக்களும் ஒரே மேடையில் பல லட்சம் பேர் தமிழகத்தின் தலைநகரில் ஒன்று திரண்டு குரல் கொடுத்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வழி காண்பது தான் நம் மாணவச் சமுதாயத்திற்கு நாம் வழங்கும் நிரந்தர நன்மையாகவும் அனிதாவின் மரணத்திற்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகவும் இருக்கும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பகையை சார்ந்த அரசியலை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலாவது நம் தலைவர்கள் தவிர்க்க முயல்வார்களா என்பதுதான் இன்றைய தலையாய கேள்வி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,810. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.