Show all

மோடிக்கு நமஸ்காரம்..வீட்டுல போய் பலகாரம்..பொன்.ராதா, தமிழிசை மீது டி.ராஜேந்தர் பொளேர்!

நடுவண் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் பிரதமர் மோடிக்கு நமஸ்காரம் மட்டுமே செய்கின்றனர். சல்லிக்கட்டு நடத்த ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்று டி.ராசேந்தர் சாடியுள்ளார்.

     மதுரையில் நடந்த சல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின்போது நடுவண் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனையும், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராசனையும் கடுமையாக தாக்கிப் பேசினார் லட்சிய திமுக தலைவர் டி.ராசேந்தர்.

     மதுரை அவனியாபுரம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. லட்சிய திமுக மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் நடந்த இப்போராட்டத்தில் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

     மேலும், அவனியாபுரத்தில் சல்லிக்கட்டு குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதில் டி.ராசேந்தரும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது பாஜகவை கடுமையாக விளாசினார்.

     தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், அவர்கள் சல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. சல்லிக்கட்டு நடத்த முயற்சி எடுக்கவில்லை. மாநில அதிமுக அரசு இதற்காக குரல் கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் சால்ரா தான் போடுகின்றனர். அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களோ தொடை நடுங்கி பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

     சல்லிக்கட்டு குறித்துக் கேட்டால் எப்போது பார்த்தாலும், நடுவண் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை ஆகியோர் மக்களிடம் சல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி வருகின்றனர். செய்கிறோம் செய்கிறோம் என்று கூறுகின்றனர். 

     ஆனால் என்ன செய்தார்கள். மோடியிடம் செய்கிறார்கள் நமஸ்காரம்.. வீட்டில் போய் செய்கிறார்கள் பலகாரம். இந்த ஆண்டு சல்லிக்கட்டு நடைபெற முழு ஆதரவுடன் லட்சிய தி.மு.க. செயல்படும். இந்த ஆண்டு சல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும்.

     மதுரை மண் வீரம் விளைந்த மண். இங்கு பாரம்பரியமான விளையாட்டு சல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான சல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக தடையின் காரணமாக நடைபெறவில்லை. இது 3-வது ஆண்டாக நீடிக்காமல் இருக்க போராட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது என்றார் ராசேந்தர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.