Show all

இன்று மோடிக்கு! அன்று நேருவுக்கு! உலகையே திரும்பிப் பார்க்க வைக்கப் போகிற, பார்த்த கருப்புக் கொடி

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியப் தலைமை அமைச்சர் நேரு சென்னைக்கு வருகை தந்தார். 

நேரு தமிழினத் தலைவர்களை யெல்லாம் முட்டாள்கள், நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டியவர்கள் என்று பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, தமிழர்களின் மனவேதனையை எதிரொலித்துக் காட்டுவதன் அறிகுறியாக, மக்கள்அதிகார உணர்வுப் படி கருப்புக் கொடி காட்டுவது என்ற முடிவை நாகர்கோவில் பொதுக் குழுவில் திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்டது.

 

நேரு 22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5059 அன்று (06.01.1958) சென்னைக்கு வருகை தந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது.

தமிழர் தலைவர்களைக் காவா நாவோடு கண்டபடி பேசுகின்ற இந்தியத் தலைமை அமைச்சர் நேருவுக்கு சென்னை மாநகரமே பொங்கி எழுந்து கருப்புக்கொடி காட்டிடத் தயாராகி விட்டது.

இரண்டு நாட்கள் முன்னதாகவே பேரறிஞர் அண்ணா, நாவலர், கலைஞர், இரா.செழியன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி மற்ற தலைவர்களும், கழகத் தொண்டர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு விட்டார்கள்.

நேருவுக்கு வெற்றிகரமாகக் கருப்புக் கொடி காட்டப்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் மொய்தீன் பிச்சை என்ற கழகத் தோழர் மிதிபட்டு இறந்தார். பேருந்துகள் பல தீக்கிரையாக்கப் பட்டன, காவல்துறை தடியடியால் பலர் காயமுற்றனர். போன்ற அவலங்களும் நடைபெற்றன.

ஆனாலும் உலகம் திரும்பிப் பார்த்து தமிழகத்தின் எழுச்சியை வியந்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாளை சென்னை வரும் மோடிக்கு, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், கருப்புச் சட்டை அல்லது கருப்பு அடையாளம் அணியுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக, திராவிடர் கழகம், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் அவர்கள் கூறியதாவது:

உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பினை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமல்லாமல், தீர்ப்பையே புறக்கணித்திருப்பதைக் கண்டித்து, மோடிக்குக் கருப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில், நாளை சென்னை வரவிருக்கும் மோடிக்கு அனைத்துக் கட்சித் தோழர்களும் கருப்புக் கொடி காட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், மூன்று மாத கால அவகாசம் கேட்டு, தீர்ப்பை கிடப்பில் போடுவதற்கான சந்தேகங்களை எழுப்பிவிட்டு தமிழ்நாட்டிற்கு வருகிறார் மோடி.

இந்தச் சர்வாதிகாரக் கொடுமையைத் தட்டிக்கேட்க துணிச்சல் இல்லாமல், பதவி ஒன்றே வாழ்க்கைப் பயன் என்று தூங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசு. தமிழகத்தின் காவிரி உரிமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆழமான அதிருப்தியையும் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் மோடிக்கு தெளிவுபட உணர்த்திடும் வண்ணம் தங்கள் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றியும், ஒவ்வொருவரும் கருப்புச்சட்டை அல்லது கருப்பு அடையாளம் அணிந்தும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை என்ன விலை கொடுத்தேனும் மீட்கும் இந்த உறுதியான போராட்டத்தில் முழு மூச்சுடன் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நம் உணர்வுகளை நடுவண் பாஜக அரசுக்கு முழுமையாக வெளிப்படுத்திட வேண்டிய மிக தலையாய தருணம் இது என்பதை உணர்ந்து கட்சி வேறுபாடு பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் உத்வேகத்துடன் இந்த கருப்புக் கொடி போராட்டத்தில் தவறாமல் பங்கேற்றிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நாளையும் உலகம் மீண்டும் திரும்பிப் பார்க்கட்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,754.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.