Show all

மீட்கப் படுமா! கட்சத் தீவு

கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவதற்கு கருணாநிதி உடந்தை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் கச்சத் தீவு மீட்கப்பட்டு மீனவர்களின் பராம்பரிய உரிமை உறுதிப்படுத்தப்படும் என்றார்.

 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருச்சுழி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 14 பேரவை தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து முதல்வர் பேசினார்.

 

அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்ற நடவடிக்கை மூலம் இலங்கை வசம் உள்ள கச்சத் தீவு மீட்கப்பட்டு, தமிழக மீனவர்களின் பராம்பரிய உரிமைகள் மீட்கப்படும் என உறுதியளித்தார்.

 

அதேநேரத்தில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கச்சத் தீவை மீட்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

 

1974 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி கச்சத் தீவு இலங்கைக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசால் தாரைவார்க்கப்பட்டது. இதை தடுப்பதற்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டதை எதிர்த்து அப்போதே கருணாநிதி வழக்குத் தொடர்ந்திருப்பாரானால், இடைக்காலத் தடை பெற்றிருக்க முடியும். பின்னர் தொடர்ந்து வழக்கு நடத்தி தமிழக மீனவர்களின் பராம்பரிய உரிமையை நிலைநாட்டியிருக்க முடியும். இந்த வாய்ப்பை கருணாநிதி தவறவிட்டுவிட்டார்.

 

மேற்குவங்க மாநிலத்திலிருந்த பெருவாரி எனும் பகுதிகளை அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு தீர்மானித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்திய பகுதிகளை வெளிநாட்டுக்கு வழங்கும் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலைப் பெற்று அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துதான் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 1960 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இத்தீர்ப்பின்படி ‘பெருவாரி’ கிழக்கு பாகிஸ்தானுக்கு வழங்கப்படவில்லை.

 

இதேபோல கருணாநிதியும், கச்சத் தீவை தாரைவார்ப்பதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருப்பாரானால் கச்சத் தீவு காப்பற்றப்பட்டிருக்கும். ஏன் வழக்குத் தொடரவில்லை என்பதை கருணாநிதிதான் விளக்க வேண்டும்.

 

கச்சத் தீவு பிரச்னையில் கருணாநிதி செய்தது பெரும் துரோகம். இலங்கைக்கு தாரைவார்த்ததில் உடந்தை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்து கொள்கிறேன்.

 

கடந்த 1991 ஆம் ஆண்டு அதிமுக அரசு பதவிவேற்ற பிறகு, கச்சத் தீவை மீட்போம் என சூளுரைத்து அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

 

மேலும், மீனவர் துன்புறுத்தல் பிரசனைக்கு காணும் வகையில், கச்சத் தீவை இலங்கையிடமிருந்து நிரந்தர குத்தகைக்கு பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. எனினும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலலாளர் என்ற முறையில் கடந்த 2008 ஆம் ஆண்டு கச்சத் தீவை இலங்கையிடமிருந்து திரும்ப பெற வலியறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு, கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் ஆதரவாக பதில் மனுத்தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு என்ன ‘எதிர் உறுதி’ மனுத்தாக்கல் செய்கிறது என்பதை பொருத்து பதில் மனுத்தாக்கல் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார் கருணாநிதி.

 

மத்திய அரசில் அங்கம் வகித்த போதும், கச்சத் தீவை மீட்பதற்கு எவ்வித உறுதியான நடவடிக்கையும் கருணாநிதி எடுக்கவில்லை. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதியின் அறிவுரையின் பேரிலேயே மத்திய அரசு செயல்படுகிறது என்றார். ஆனால், இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத் தீவை திரும்பப் பெற முடியாது என உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு தாக்கல் செய்தது. இதுதான் மத்திய அரசுக்கு கருணாநிதி வழங்கிய அறிவுரையா? இதற்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும்.

 

2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன், உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டது.

 

கச்சத் தீவை மீட்பதற்கு எவ்வத நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி, தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கச்சத் தீவு மீட்கப்படும் என கூறியுள்ளார். இது அவரது கபட நாடகத்தையே வெளிக்காட்டுகிறது.

 

பேச்சுவார்த்தை மூலமும், உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்றும் கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.

 

மேலும், இரு நாட்டு மீனவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று கச்சத் தீவு மீட்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றார் ஜெயலலிதா.

 

 

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.