Show all

இன்று மனிதச் சங்கிலி போராட்டம் தமிழ்நாடு தழுவி! பதினேழு கட்சிகள், நாற்பத்திநான்கு இயக்கங்கள் முன்னெடுப்பில்

பதினேழு கட்சிகள், நாற்பத்திநான்கு இயக்கங்கள் முன்னெடுப்பில், தமிழ்நாடு தழுவி இன்று நடைபெறவுள்ள மனிதச்சங்கிலி போராட்டம் குறித்து- திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி உள்ளிட்டோர் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க இன்று மாலை நான்கு மணி முதல் ஐந்து மணிவரை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்பார்கள், பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். 

திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி உள்ளிட்டோர் இன்று நடைபெறும் சமூக நல்லிணக்க பேரணி தொடர்பாக கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதில், மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர். 

காந்தி பிறந்தநாள் அன்று, ஆர்எஸ்எஸ் இயக்கம், வடமாநிலங்களில் இருந்து தொண்டர்களை இறக்கி, தமிழ்நாட்டில் 51 இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்டது. அதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுப்பில் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டு அடுத்த மாதம் அந்தப் பேரணி நடைபெறலாம் என்கிற நிலையில், இன்று சமூக நல்லிணக்கப் பேரணியை நடத்த திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், கி.வீரமணி உள்ளிட்டோர் தலைமையிலான கட்சிகள். இதுதொடர்பாக அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். 

அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 'மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் இன்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் புதிய வரலாறு படைக்க உள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள தகவல்படி பல லட்சம் பேர் மனிதச் சங்கிலியில் பங்கேற்கவுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த இடங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து கூட்டாகக் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடங்கி இன்னொரு குறிப்பிட்ட இடம் வரையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் கைகளைக் கோர்த்து நிற்க வேண்டுகிறோம். சென்னையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சார்ந்த அனைத்துக் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் யாவரும் மனிதச் சங்கிலியில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

சென்னையில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் கை கோர்த்து நிற்பார்கள். இதனைத் தொடர்ந்து சாந்தி திரையரங்கம் வரை வடசென்னை மாவட்டத்திற்கு உள்ளிட்ட தோழர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும். 

சாந்தி திரையரங்கம் முதல் ஆயுள் காப்பீட்டுக் கழகம் வரை நடு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும். ஆயுள் காப்பீட்டுக் கழகம் முதல் ஆயிரம் விளக்கு மசூதி வரை தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சங்கிலியாக அணிதிரள வேண்டும். 

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் மனித சங்கிலி இயக்கம் சிறப்புடன் நடைபெற்றிட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள இடங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அணிதிரட்டி இந்த மாபெரும் இயக்கத்தில் பங்கேற்கச் செய்திட சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.   

எந்தச் சூழ்நிலையிலும் போக்குவரத்திற்கு இடையூறாக மனிதச் சங்கிலி அமைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும் என்பதை கவனப்படுத்துகிறோம். மாலை 4 மணிக்கு மனிதச் சங்கிலி தொடங்கி சரியாக 5 மணிக்கு முடித்திட வேண்டும். மனித சங்கிலி முடிந்தவுடன் அமைதியான முறையில் அனைவரும் கலைந்து செல்ல வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,398.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.