Show all

பொன்னார், தமிழிசையைப் பார்த்து கேரளா நம்பூதிரிகள் அதிர்ச்சி - திருநாவுக்கரசர் கிண்டல்

பாஜக தமிழக தலைவர் தமிழிசை, நடுவண் அமைச்சர் பொன்னாரைப் பார்த்து கேரளா நம்பூதிரிகளே அதிர்ச்சியடைகின்றனர் என்று திருநாவுக்கரசர் கிண்டலடித்துள்ளார்.

     தமிழிசை சவுந்தரராஜனும், நடுவண் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சொல்லும் சோதிடம் உடனே பலிப்பதால் அதைப் பார்த்து கேரள நம்பூதிரிகளே அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கிண்டலடித்துள்ளார்.

     இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார். பாஜகவை கடுமையாக சாடினார்.

     தமிழகம் மிகப் பெரிய மாநிலம். அதற்கு ஒரு நிரந்தர ஆளுநரை நியமிக்க, நடுவண் அரசுக்குத் துப்பில்லை. தி.மு.க சார்பில் மும்பை சென்று ஆளுநரைப் பார்த்து புகார் மனு கொடுத்திருக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகி இருக்கலாம் என நினைக்கிறேன். மூன்று பேர் போய் வரவே இவ்வளவு செலவு ஆகிறது என்றால், சாதாரண மக்களால் மும்பை சென்று ஆளுநரைப் பார்த்து வர முடியுமா? இதற்கெல்லாம் அக்கறை எடுக்காமல், இடைத்தேர்லை நிறுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

     தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக வந்து பாஜக காலூன்ற முயற்சித்து வருகிறது. பாஜகவினர் நினைப்பது தமிழகத்தில் ஒரு போதும் நடக்காது.

     பாஜக வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் நினைப்பதே உலகமகா நகைச்சுவை.

     ஆனால், அவர்கள் தமிழகத்தில் கொல்லைப்புறம் வழியாக உள் நுழைய நினைத்து செய்கிற செயல்களிலெல்லாம் வெற்றி அடைகிறார்கள். அதிமுகவை இல்லாமல் ஆக்குவோம் என்றார்கள். அப்படி செய்து விட்டார்கள். கட்சியை இரண்டாக உடைத்து விட்டார்கள் என்றார்.

     இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்றார்கள். இடைத்தேர்தலை ரத்தாகும் என்றார்கள் அதுவும் நடந்து விட்டது. இப்படி தமிழிசையும், பொன்னாரும், நடக்கப் போவதை முன் கூட்டியே சொன்னார்கள். இப்படி இவர்கள் சொல்வது எல்லாம் பலித்து விடுவதால் பொன்னார், தமிழிசையைப் பார்த்து ஜோதிடர்கள், கேரள நம்பூதிரிகள் எல்லோரும் தங்கள் தொழிலுக்கு போட்டி வந்துவிட்டதாக பயந்துபோயிருக்கிறார்கள் என்று திருநாவுக்கரசர் நக்கலாக கூற கைத்தட்டலும் விசிலும் பறந்தது.

     அதிமுகவை உடைத்து, சின்னத்தை முடக்கியதோடு இராதாகிருட்டினன் நகரில் தேர்தல் ரத்து செய்ததும் பாஜக தான் என்று குற்றம் சாட்டிய திருநாவுக்கரசர், தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்கிற பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.