Show all

தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல; பொதுத்தேர்தலே வரும் அமித் ஷா-வின் அடுத்த அதிரடி

தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையை அடுத்து, இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

     பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக அரசின் மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, தங்கம் வாங்கி விற்கும் தரகர் பிரேம்குமார் உள்ளிட்டவர்களின் வீடு, அலுவலகங்களைக் குடைய ஆரம்பித்தது வருமான வரித்துறை.

     இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சிபிஐ-யும் களத்தில் இறங்கின. அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், அவரது மகன் ஆகியோரையும் அதிகாரிகள் விட்டுவைக்கவில்லை.

     முதல்வர் செயலலிதா இல்லாததால், ஆளும்கட்சியை வழிக்குக் கொண்டுவருவதற்காக, இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக அனைவரும் அறிந்த போதும்- இதைப் பற்றியெல்லாம் ஆட்சியில் இருந்தவர்கள் பகிரங்கமாக எதிர்த்துப் பேசவில்லை.

     உதய் மின்திட்டம் உள்பட நடுவண் அரசின் பல திட்டங்களில் மாநில அரசும் இணைந்தது.

     உத்தரப்பிரதேசத் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா.

‘தமிழ்நாடு நமக்கு மிக முக்கியமான மாநிலம்’ என ஈஷா யோக மைய விழாவிலும் பா.ஜ.க நிர்வாகிகளிடம் கோடிட்டுக்காட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

     இந்த நேரத்தில் இராதாகிருட்டினன் நகருக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு மிக முக்கியக் காரணமே, டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுதான்.

     ‘தேர்தல் வெற்றிக்காக எவ்வளவு பணத்தையும் இறைப்பார்கள்’ என்பதை அறிந்து, கூடுதல் கவனத்தைத் திருப்பியது வருமான வரித்துறை. தொகுதி நிலவரம் குறித்து நடுவண் நிதித்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கும் அறிக்கைகளை அனுப்பினர். இவை அனைத்தும் அமித் ஷாவின் அறிவுரையின்படியே நடந்தன.

     போயஸ் தோட்டத்திற்கு நெருக்கமான அமைச்சர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்துவதுதான் இந்த அதிரடியின் மிக தலையாய  நோக்கம்.

     இராதாகிருட்டினன் நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், தொகுதி மக்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்கள், வாக்குறுதிகள் என அனைத்து விவகாரங்களையும் தனித்தனியாகச் சேகரித்தனர்.

     போயஸ் தோட்டத்தின் மிக தலையாய பரிவர்த்தனைகளில் விஜயபாஸ்கரின் முக்கியத்துவம் குறித்து, ஏராளமான தகவல்கள் கிடைத்தன. கார்டனுக்கு மிக நெருக்கமான வளையத்தில்தான் தற்போது ஆட்சியில் கோலோச்சுகின்ற மாண்புமிகு இருக்கிறார். நீட் தேர்வு, மைல் கற்களில் இந்தி எழுத்துகள் போன்ற விவகாரங்களில் நடுவண் அரசைப் பகைத்துக் கொள்ளாமல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஊடகங்களிடமும் நிதானமாகவே பேசிவருகிறார். ‘மத்திய அரசைப் பகைத்துக் கொண்டால், சேகர் ரெட்டி ஆயுதம் நம் மீது திரும்பும்’ என அவர் உறுதியாக நம்புவதுதான் அமைதிக்குக் காரணம். எனவேதான், விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை குறித்து, எந்தக் கருத்தையும் கூறாமல் இருக்கிறார். தினகரனுக்கும் ஆட்சியில் உள்ள அமைச்சர்களுக்கும் இடையில் இடைவெளி உருவாக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தினகரனுக்கு ஆதரவான ஆளும்கட்சிப் புள்ளிகள் மீது வரும் சூன் மாதம் வரையில் ரெய்டு நடவடிக்கைகள் தொடர்ந்து அரங்கேற இருக்கின்றன. அனைத்தையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் மனநிலையில் அமித் ஷா இல்லை. என்கிறது பாஜக வட்டாரம் விரிவாக.

     இன்னும் இரண்டு மாதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘இந்தத் தேர்தலில், தமிழகத்தின் ஆதரவு தேவை’ என்ற மனநிலையில் நடுவண் அரசு இல்லை. ‘வாக்குப் போடுங்கள் என இவர்களிடம் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. அவர்களாகவே ஓட்டுப் போடுவார்கள். இது வலுவிழந்த அரசு’ என்பதை அறிந்து வைத்திருக்கிறார் அமித் ஷா.     எனவேதான், தினகரனுக்கு விசுவாசம் காட்டுகின்றவர்களை, சோதனைகள் மூலம் அலறவைக்கிறார். இராதாகிருட்டினன் நகருக்கு மீண்டும் இடைத்தேர்தலை அறிவிக்காமல், பொதுத் தேர்தலைக் கொண்டுவரும் முடிவில் இருக்கிறார்.

     கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் கோலோச்சிய அமைச்சர்கள் ஒவ்வொருவரும்,

சொத்துக்களை காப்பாற்றுவது குறித்துத்தான் அவர்கள் கவலைப்படுகிறார்களே தவிர, ஆட்சி அதிகாரம், இரட்டை இலையைக் காப்பாற்றுவது குறித்த சிந்தனையே அவர்களுக்கு இல்லை.

     ‘தினகரனிடம் நெருங்கி இருக்காமல் தள்ளியே இருப்போம். நீங்களும் அமைதியாக இருங்கள்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தூபம் போடும் வேலைகளையும் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறார் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகி ஒருவர்.

     வருமான வரித்துறையின் பார்வை யாரை நோக்கி நீளும்? என்ற அச்சம் அமைச்சர்கள் மத்தியில் வலம் வந்தாலும், அதிரடி முன்னெடுப்புகளில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க தலைமை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.