Show all

கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா வாழ்த்துக்கள்! இன்று கார்த்திகை திருவிழா.

கார்த்திகை மாதத்தில்- கார்த்திகை நாள்மீன் நாளில்- முழுநிலா நாளில்- தமிழர் கொண்டாடும் தொன்;மையான திருவிழா கார்த்திகை விளக்கீட்டு திருவிழா. இன்று கார்த்திகை திருவிழா. கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா வாழ்த்துக்கள்!

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்க இலக்கியமான நற்றிணை, அந்தக் காலத்தில் கார்த்திகை திருநாளன்று விளக்கேற்றும் நிகழ்வை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. தமிழர்களின் தொன்மையான விழாக்களில் திருக்கார்த்திகை விளக்கேற்று விழாவும் ஒன்று. கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா, சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், புறநானூறு போன்றவற்றில் பல்வேறு இடங்களில் கார்த்திகை விழா நாளன்று மக்கள் விளக்கேற்றி வழிபட்ட காட்சிகள் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. 

பத்து ஆண்டுகளுக்கு முன் கொண்டாடப்பட்ட கார்த்திகைத் திருவிழாவுக்கும், இன்று கொண்டாடப்படும் கார்த்திகைத் திருவிழாவுக்கும் நிறைய வேற்றுமைகளைக் கண்டறியலாம். அன்று குப்பைக் குழி, நன்செய் மற்றும் புன்செய் நிலங்களின் எல்லைகள், கொட்டகை, கூரை மற்றும் வீடு முழுவதும் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுவோம். கார்த்திகைத் திருநாளன்று மாலை நேரத்தில் ஊர் முழுவதும் அவ்வளவு எழில் கொஞ்சும். எந்தத் திசையை நோக்கினாலும் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றித் திரிகளை வைத்து விளக்கேற்றிப் ஒளிர்வதைக் காணலாம். விளக்கெண்ணெயும், நல்லெண்ணெய்யும் எரிந்து வெளிப்படும் வாசனை மனதையும், கிராமத்தையும் நிறைக்கும்.

ஆனால், இன்றோ அகல் விளக்குகளுக்குப் பதில் மெழுகுவத்திகளும், மின் விளக்குகளும் ஏற்றப்படுகின்றன. கிராமங்களில்கூட மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது. கார்த்திகை விழா வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பே மாவளி செய்து கார்த்திகைச் சுளுந்தைக் கொளுத்தி வானத்தில் பூத்திருக்கும் விண்மீன்களுக்கு இணையாகத் தீப்பொறியைப் பறக்கவிடுவோம். இன்று இந்தப் பழக்கம் அருகிவிட்டது. சில பகுதிகளில் கார்த்திகை மாவளி விற்கப்படும் நிலையிலும் அவற்றை வாங்கிச் சுற்றுவதற்கு ஆளில்லை. தற்போதிருக்கும் இளம் தலைமுறையினருக்குக் கார்த்திகைத் மாவளி என்றாலே என்னவென்று தெரியாது.

கார்த்திகை திருவிழாவன்று எரிக்கப்படும் சொக்கப்பனை கொண்டாட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்கீடு விழாவுக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக் காம்புகள் நார் எடுக்க, நுங்கு உணவாக, பனையின் பாளை பதநீர் தயாரிக்க, மரக்கட்டை அடுப்பு எரிக்க... என்று பனையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுவதால்தான் பனை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை திருநாளன்று விளக்கேற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்பானதோ அதேபோன்று பனையோலைக் கொழுக்கட்டை தீனியும் சிறப்பானது. அதிலும் தென் தமிழகத்தில் பனையோலைக் கொழுக்கட்டை மிகவும் சிறப்பு பெற்றது. பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, இந்தக் கலவையைப் பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு, இணை எதுவுமில்லை என்று கூறலாம். கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா முடிந்த பிறகும் அதன் சுவை நாவில் நிலைத்திருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.