Show all

காயங்களோடு திரும்பி வந்திருக்கிறார் களஞ்சியம்! மனிதப் பண்பே இல்லாத மரநாய்களாய் தாக்கியிருக்கும் இலங்கை இராணுவம்.

இலங்கை யாழ் பல்கலைக்கழகத்துக்கு மாவீரர் நாளையொட்டி சிறப்பு விருந்தினராகச் சென்ற இயக்குநர் களஞ்சியம், ராணுவத்தின் தாக்குதலால் காயங்களோடு திரும்பி வந்திருக்கிறார். அபிநந்தன் அவர்களைக் கண்ணியமாக நடத்திய பாகிஸ்தான் இராணுவத்தை விட- பயங்கரம், பலிஉணர்ச்சி, வஞ்சம் கொண்டவர்களா இலங்கையர்.

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கை யாழ் பல்கலைக்கழகத்துக்கு மாவீரர் நாளையொட்டி சிறப்பு விருந்தினராகச் சென்ற இயக்குநர் களஞ்சியம், ராணுவத்தின் தாக்குதலால் காயங்களோடு திரும்பி வந்திருக்கிறார்.

மாவீரர் நாள் நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்றிருக்கிறார் தமிழர்நலன் பேரியக்கத்தின் தலைவரும் இயக்குனருமான மு.களஞ்சியம். இவ்விழாவை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில்தான் இப்படியொரு கொடூர நிகழ்வு இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் களஞ்சியம், தான் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப் பட்ட விதத்தை விவரித்தார். 

மாவீரர் நாள் நிகழ்வுக்காக ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று உரையை நிகழ்த்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இலங்கையில் நடத்தினால் என்ன என்று நினைத்தேன். அதற்கேற்ப, இலங்கையில் உள்ள இளைஞர்கள் சிலர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றுவிட்டு அறைக்கு வந்தேன். 

இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள். இங்கு உங்களுக்கு என்ன வேலை? என மிரட்டும் தொனியில் கேள்விகளைக் கேட்டார்கள். நானும் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தேன். இது அவர்களுக்கு நிறைவு அளிக்கவில்லை போலும். உங்களை நாங்கள் கண்காணித்துக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

பின்பு நான் கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வந்தபோது, இலங்கை ராணுவத்தினர் என்னைப் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்கேஷ்வரனும், நீங்கள் இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது, உடனே கிளம்புங்கள் என்றார். எனவே நானும் கிளம்ப முயன்றேன்.

பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக விமானத்தில் கிளம்பினேன். ஆனால், திரிகோணமலை விமான நிலையத்தில் என்னை மட்டும் இறக்கிவிட்டார்கள். அத்துடன், ஏதோ சிறைக் கைதியை அழைத்துச் செல்வதுபோல் தரக்குறைவாக நடத்தினார்கள். பின்பு ஒரு மணிநேரம் கழித்து இலங்கை ராணுவத்தினர் என்னிடம் வந்து, உன் தலைவன் யார்? நீ எங்கிருந்து வருகிறாய்? எதற்காக இங்கு எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தாய்? என மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டார்கள். அதற்கு நான், எனக்குத் தலைவன் என யாரும் கிடையாது என்றேன்.

நான், சீமான், வேல்முருகன் ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றைக் காட்டி நீ என்ன சீமான் கட்சியா? இலங்கையில் முடிந்துபோன விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர்கொடுக்க வந்திருக்கிறாயா? என ஒரு அதிகாரி பேசிக் கொண்டிருக்கும்போதே, எனக்குப் பின்னால் இருந்த ஒருவர் அவர் வைத்திருந்த துப்பாக்கியால் என்னைக் கடுமையாகத் தாக்கினார். இதில் எனது பல் மற்றும் கழுத்து எலும்பு உடைந்தது. நான் வலியால் துடித்தேன். ஆனாலும், அவர்கள் என்னை விடவில்லை. தொடர்ந்து என்னைக் கடுமையாக அடித்தார்கள்.

பின்னர், சிறு விமானத்தில் என்னை ஏற்றி அனுப்பினார்கள். விமானத்திலிருந்து தள்ளிவிடப் போகிறார்கள் என்ற உயிர் பயத்திலிருந்தேன். இருக்கட்டும்- தலைவன் வாழ்ந்த இடத்தில் என் உயிர் போனாலும் மகிழ்ச்சியே என்று மனதில் ஓர் ஆறுதல் ஓடிக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ரத்தக் காயத்தோடு இங்கு வந்தேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நான் எப்படி மருத்துவமனைக்கு வந்தேன் என்றுகூட தெரியவில்லை என்று தெரிவிக்கிறார் களஞ்சியம்.

இன்னும் இந்த தகவல் முழுமையாக பரவாத நிலையில், தமிழக மக்களின், இந்திய அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது என்கிற செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இலங்கை இராணுவத்திற்கும், இலங்கை அரசுக்கும் நமது கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்;திய அரசு- இலங்கை அரசுக்கு, உரிய கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம். 

அபிநந்தன் அவர்களைக் கண்ணியமாக நடத்திய பாகிஸ்தான் இராணுவத்தை விட- பயங்கரம், பலிஉணர்ச்சி, வஞ்சம் கொண்டவர்களா இலங்கையர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.