Show all

காங்கேயம் காளை ரூ.3 லட்சம்! அத்திக்கோம்பையில் 2வது நாளாக களைகட்டிய மாட்டுத்தாவணி

06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் 122வது ஆண்டு மாட்டுத்தாவணி தொடங்கியது. இங்கு காங்கேயம் காளை சுமார் ரூ.3 லட்சம் வரை விலை பேசப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் உச்சி மாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 122வது மாட்டுத்தாவணி நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய திருவிழா வரும் திங்கட் கிழமை வரை நடைபெறுகிறது. முந்தா நாளே கால்நடைகள் வரத் தொடங்கின. மதுரை, சேலம், காங்கேயம், பழநி, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதில் நாட்டு மாடுகள், பசு மாடுகள், காங்கேயம் காளைகள், பூச்சி காளைகள் என அழைக்கப்படும் இனவிருத்தி காளைகள் அதிகம் வந்துள்ளன. காங்கேயம் காளை சுமார் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை விற்பனையாகிறது. இதன் கன்றுக்குட்டி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதேபோல் விலையுயர்ந்த போட்டி குதிரைகள், நடனக் குதிரைகள், பெரிய குதிரைகள் வர தொடங்கியுள்ளன. கால்நடைகளை வாங்க தஞ்சாவூர், திருச்சி, சேலம், தேனி, மதுரை, வாடிப்பட்டி, வெள்ளக்கோவில் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் குவிந்துள்ளனர். இதுதவிர மாடுகளுக்கு பயன்படும் சரடு, மூக்கணாங்கயிறு, சாட்டை, மணிக்கொச்சம், கழுத்து சலங்கை உள்ளிட்ட பொருட்களும் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளன.

சேலம் எடப்பாடியை சேர்ந்த கயிறு வியாபாரி கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக அத்திக்கோம்பை மாட்டுத்தாவணிக்கு கயிறு விற்க வருகிறோம். எங்களிடம் மாட்டிற்கான கயிறு ரூ.20ல் இருந்து ரூ.200 வரை விற்பனைக்கு உள்ளது. மாட்டின் சலங்கை மணி ரூ.600ல் இருந்து ரூ.2000 வரை விற்பனை செய்கிறோம். நாங்கள் அந்தியூர், திருவண்ணாமலை, காங்கேயம், தொப்பம்பட்டி பகுதிகளில் நடக்கும் மாட்டுச்சந்தைக்கு வியாபாரத்திற்கு செல்வோம். ஆனால் அத்திக்கோம்பை மாட்டுச்சந்தையில் தான் விற்பனை அதிகமாக இருக்கும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.