Show all

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம்! தமிழ்நாடு ஆளுநருக்கு

வேந்தராக தொடர்வதற்கு ஆளுநருக்கு இருந்த அதிகாரத்தை அகற்றி, அதை முதல்வருக்கு வழங்கும் சட்டத்தை ஒரே மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி, தனக்கு அனுப்பியவுடனே அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதைக் கிடப்பில் போடுவதும், மீறி செயல்படுவதும் சட்டப்பேரவை மாண்புகளை மதிக்காத செயலாகும். என்று தமிழ்நாடு ஆளுநருக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் பொறுப்பேற்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். 

பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு வகுக்கும் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். 

அரசின் கொள்கை முடிவுகளை எதிரொலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகவும், தெளிவாகவும், உறுதிபடத் தெரிவித்துள்ளதைப் பாராட்டுகிறேன். 

தமிழ்நாடு ஆளுநர்- பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பதவியிருக்கிற நிலையில், தேவையற்ற வகையில் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் தலையிட்டு, வேண்டாத குளறுபடிகளைச் செய்து வருகிறார். 

இந்தச் சூழ்நிலையில், துணைவேந்தர்களுக்கு முதல்வர் கூறியுள்ள அறிவுரை காலத்துக்கு ஏற்றதாகும். துணைவேந்தர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கும் உரிமை, அவைகள் பின்பற்றவேண்டிய கல்விக் கொள்கை ஆகியவை குறித்த அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கே உண்டு. 

அது ஒன்றிய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநருக்கு இருப்பது, மக்களாட்சியின் அடித்தளத்தையே தகர்ப்பதாகும். இந்த அடிப்படையில்தான், பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் பொறுப்பேற்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்காமல், ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார். 

ஏற்கெனவே பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்திலும், வேறு சில மாநிலங்களிலும் இத்தகைய சட்டம் செயல்படுத்தப்பட்டுத்தாமே வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநர் காலம் கடத்துவது மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காத போக்காகும். 

வேந்தராக தொடர்வதற்கு ஆளுநருக்கு இருந்த அதிகாரத்தை அகற்றி, அதை முதல்வருக்கு வழங்கும் சட்டத்தை ஒரே மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி, தனக்கு அனுப்பியவுடனே அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதைக் கிடப்பில் போடுவதும், மீறி செயல்படுவதும் சட்டப்பேரவை மாண்புகளை மதிக்காத செயலாகும். எனவே, ஆளுநர் தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பழ.நெடுமாறன். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,359.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.