Show all

தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் வருமுன் காப்பதற்கான கமலின் எச்சரிக்கை

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியலில் களமிறங்கப் போவதாக நடிகர் கமல் அறிவித்துள்ள நிலையில், வடசென்னைக்கு ஆபத்து வந்துள்ளதாகவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்று அவரது கீச்சு பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில்,

தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஒரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை புறக்கணிப்பதால் வட சென்னைக்கு ஆபத்து.

கோசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றை விட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்துவிட்டோம்.

வல்லூர் மின் நிலையமும் வடசென்னை மின் நிலையமும் தங்கள் சாம்பல் கழிவுகளைக் கோசஸ்தலையாற்றில் கொட்டுகின்றன.

இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளது. மீனவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து குரலெழுப்பியதும் செவிடர் காதில் உதிய சங்குதான். பற்றாக்குறைக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் பாரத் பெட்ரோலியமும் தங்கள் எண்ணெய் முனையங்களை நட்டாற்றில் கட்டியிருக்கின்றன.

காமராசர் துறைமுகத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற போர்வையில் கோசஸ்தலையின் கழிமுகத்தின் 1000 ஏக்கர் நிலத்தை சுருட்டும் வேலையும் நடப்பதாகக் கேள்விபடுகிறேன்.

நில வியாபாரிகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையையும், உதவியையும் ஏழை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசும் நல்ல ஆற்றைப் புறக்கணிக்கும் உதவாக்கரைகள் தான். வழக்கமாக வரும் மழை போன ஆண்டு போல் பெய்தாலே வடசென்னைக்கு ஆபத்து வந்துவிடும்.

தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காப்பதே நல்லது என்று கூறியிருக்கிறார் கமல்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.