Show all

வனத்துறையினர் இளம்உழவரை அடித்து கொன்றுவிட்டதாக, கிராம மக்கள் போராட்டம்

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் உழவர் திருமலை. இவர் நேற்று வனப்பகுதிக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள வனத்துறையினர் அவரை அடித்து கொன்றுவிட்டதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தார்கள். அவரது உடல் சரியாக 4 மணி அளவில் கிராமத்தினரால் கண்டெடுக்கப்பட்டது.

அதன் பிறகு அவர்கள் அந்த உடலை எடுக்கக்கூடாது, அவரை கொலை செய்த தாண்டவராயன், தினகரன் ஆகிய வனத்துறையினர்களை கைது செய்த பின் தான் உடலை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனப்பகுதியில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அப்போது காவல்துறையினர், அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கவில்லை. ஆகையால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பொதுமக்கள் அனைவருமே புழுதியூர் என்ற திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 6 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணி நேரம் ஆகியும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறையினரும் அந்த இடத்திற்கு வரவில்லை. சுமார் 7.30 மணி அளவில் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி அவர்கள், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் கிராமமக்கள் கோரிக்கைகளுக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. உடனடியாக கலைந்து போக வேண்டும் என்று தான் அவர்கள் கூறினார்கள். இதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து 9 மணி வரை போராட்டம் நீடித்தது. போராட்டம் நீடித்தபோது அவர்களைக் கலைக்க காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார்கள்.

100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள் ஆகிய அனைவர் மீதும் தடியடி நடத்தப்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர், அவர்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனிடையே காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இருவருமே கற்களால் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இறந்த திருமலை மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது செங்கம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். வனத்துறையினர்கள் தாண்டவராயன் மற்றும் தினகரன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.