Show all

அடிப்படை அருமையே கமல்; கட்டிடத்தை கலப்படம் இல்லாமல் வலிமையாகக் கட்டுவீர்களா! கட்சியின் அடிப்படையை விளக்கிய கமல்

கமல் தனக்குக் கிடைத்த சின்னமான கைவிளக்கை வைத்தே தனது கட்சிக்கான அடிப்படையைத் தெளிவு படுத்தினார். கமல் கோவை கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாவது: சல்லிக்கட்டு போராட்டம் தான் கைவிளக்கின் மின்கலமாம் அனிதா தான் திறவு ஆம்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டுக்குப் போராடிய இளைஞர்கள்தான் இந்த கைவிளக்குக்கான மின்கலம். அனிதாதான் கைவிளக்கின் திறவு என்று கோவையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் கமல் பேசினார்.

பண மதிப்பு இழப்பு செய்தநாள். கருப்புப் பணமெல்லாம் வெளியே வந்துவிடும் என நம்பி, பாராட்டி கீச்சுப் போட்டேன். ஆனால் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தநாள். ஏழைகளின் வாழ்வை அழித்த நாள். கையில் பணமில்லாமல், வங்கியிலும் பண இயந்திரம் வாசலிலும் நிற்க வைத்த மோசமான நாள்.

நம் இளைஞர்கள் சல்லிக்கட்டுக்காக போராடினார்கள். அதில் மாவோயிஸ்ட்டுகள் புகுந்துவிட்டார்கள் என்று சொல்லி, மாணவனையும் மீனவனையும் காவல்துறையைக் கொண்டு அடித்து நொறுக்கினார்கள். மாணவர்களின் உண்மையான போராட்டத்திற்கு, கருப்புச்சாயம் பூசினார்கள்.

உழவர்கள், டெல்லியில் 28 நாட்கள் போராடினார்கள். அவர்களை நடுவண் அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாநில அரசும் செவிமடுக்கவில்லை. உயிரைவிட மானம் பெரிது என்றிருந்த தமிழக உழவர்களை அவமானப்படுத்திய நாள்.

அனிதா எனும் மாணவியின் மருத்துவர் கனவையும் அவரின் உயிரையும் தகர்த்த துயரமான நாள். அந்த அப்பாவிப் பெண்ணை கொலை செய்த நாள். 'அனிதா தற்கொலைதானே செய்துகொண்டாள்' என்று கேட்கலாம். 'சத்தமே இல்லாமல், பக்கத்தில் வராமல், சட்டத்தாலேயே கொன்று போட்டார்கள் என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.

இதழியலாளர் கௌரி லங்கேஷை, பெங்களூருவில் சுட்டுக்கொன்ற அரக்கத்தனமான நாள்.

நல்ல காற்றுதானே கேட்டார்கள். அதுவொரு குற்றமா? நூறுநாள் அறப்போராட்டம்தானே நடத்தினார்கள். ஆனால், 13 பேரை, காவல்துறையைக் கொண்டு, துப்பாக்கியால் சுட்டு, கார்ப்பரேட் கம்பெனிக்கு ரத்தக்கம்பளம் விரித்த நாள்.

இவற்றையெல்லாம் கேட்டால், தேசபக்தி இல்லாதவன் என்று சொல்லிவிடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை.

சல்லிக்கட்டுக்குப் போராடிய இளைஞர்கள்தான் இந்தக் கைவிளக்குக்கு மின்கலம். அனிதாதான் கைவிளக்கின் திறவு!

'நீட் வேண்டாம் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை' என்று சொன்ன அதிமுக அரசும் 'நீட் உண்டு. எழுதியே ஆகவேண்டும்' என்று சொன்ன பாஜக அரசும் இன்றைக்கு கூட்டணி வைத்துக்கொண்டு வாக்கு கேட்க வருகிறார்கள்.

ஈழத்தமிழர்கள் பற்றியும் அவர்கள் உயிர் பற்றியும் இரக்கமே இல்லாமல் இருந்தவர்கள் இன்றைக்கு கூட்டணி வைத்துக்கொண்டு ஓட்டு கேட்கிறார்கள். ஏழு பேர் விடுதலை குறித்தும் மீனவர்கள் பாதுகாப்பு குறித்தும் இலங்கை கடற்படை குறித்தும் கச்சத்தீவு மீட்பு குறித்தும் சேது சமுத்திர திட்டம் குறித்தும் தேர்தல் அறிக்கையில் பட்டியல் போடுகிறார்கள்.

இவர்களையெல்லாம் ஒடுக்கும் விதமாக, நம் மக்களின் குரலாக மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் மக்களவையிலும் சட்டமன்றத்திலும் குரல் கொடுப்பார்கள். இவ்வாறு கமல் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,102.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.