Show all

சாதியம் குறித்த கமல்ஹாசன் பார்வை! இடஒதுக்கீட்டிற்கு எதிரானதாகவே பதிவாகும்

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன் எந்த புத்தகத்தின் பெயரை கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் வேறு ஒரு பதிலை தந்தார். 

கமல் அளித்த பதில், 'நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், பூணூல் அதனாலேயே அதை தவிர்த்தேன்' என்றார். இப்படி சொல்வதால், ஏற்றதாழ்வை உண்டாக்கிய சாதியில் இருந்து கொண்டு  அவருக்கு சாதிய ஏற்றதாழ்வில் உடன்பாடு இல்லை என்று ஒப்புக் கொள்ளலாமே யொழிய அந்த ஏற்றதாழ்வு கற்பிக்கிற சாதியில், அவர் இல்லை என்று சொல்லி விட முடியாது. 

அடுத்ததாக: சாதியை அடுத்த தலைமுறைக்கு எப்படி கொண்டு செல்ல இருக்கிறீர்கள்? பள்ளி, கல்லூரி சேர்க்கையின் போது அதை கட்டாயமற்றதாக மாற்றலாமா? என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு, கமல்ஹாசன் அளித்த பதில், 'எனது இரண்டு மகள்களின் பள்ளி சேர்க்கை சான்றிதழிலும் சாதி மற்றும் மதத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அடுத்த தலைமுறைக்கு போவதற்கு இது தான் ஒரே வழி. இதற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும். இதனை கேரளா அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இவர்களை கொண்டாட வேண்டும்' என்றார். 

கமல்ஹாசனின் இந்த பதில் மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது. பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைகளில் தங்களது சாதியை குறிப்பிட்டால் மட்டுமே ஒரு சில சாதியினரால் அரசு வழங்கும் இடஒதுக்கீட்டு உரிமையை பயன்படுத்த முடியும். அப்படி இருக்கையில், கமல்ஹாசன் இப்படி கூறியிருப்பது சாதிய இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தாகவே பதிவு செய்து கொள்ள முடியும்.

இடஒதுக்கீடு அமலில் உள்ள வரை, சாதி சான்றிதழ் கட்டாயமாக இருந்தாக வேண்டும். இடஒதுக்கீடு பெறுகிற இடத்தில் இருக்கிறவர்கள் தான் இந்த மாதிரி நடவடிக்கை எடுத்தால் பெருமைக்குரியது.

ஏற்றதாழ்வு கற்பித்த சாதியில் இருந்து கொண்டு சாதி அடையாளத்தை துறப்பது எளிது. இடஒதுக்கீடு பெறுகிற இடத்தில் இருப்பவரை சாதி அடையாளத்தை துற என்று சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. 

மதத்தை சாதியோடு பொருத்தக் கூடாது. மதம் மாறிக் கொள்ள முடியும். தொழில் அடிப்படையாக வினையே ஆடவர்க்கு உயிரே என்று தொழில் போற்றிக் கொள்ளப் பட்ட போது, சாதி தமிழ் சமுதாயத்தில் சிறப்பு அடையாளமாக இருந்தது. அப்போது தொழில் மாறினால் சாதியும் மாறும். 

ஆரியர் வருகைக்குப் பிறகு சாதி ஏற்றதாழ்வு கற்பிப்பதற்கான பிறப்பு அடிப்படையாக மாறிவிட்டது. இந்த பிறப்பு அடிப்படை சாதியை மாற்றிக் கொள்ள முடியாது. சாதி வேண்டாம் என்று மறுக்கலாம். அது அவரவர் விருப்பம்; நிர்பந்திக்க முடியாது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,836.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.