Show all

டிரம்ப்பின் அறிவார்ந்த நடவடிக்கை! அன்னியநாட்டு பொருள்களுக்கு அதிக வரி விதித்தல்

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு பல புதிய வரிகளை டிரம்ப் அரசு விதிக்கத் தொடங்கியுள்ளது. தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அதே அளவுக்கு பிற நாடுகள் தங்களிடம் பொருட்களை வாங்க வேண்டும், இல்லையேல் கூடுதலாக வரி விதிப்போம் எனும் டிரம்ப்பின் முயற்சி அறிவார்ந்த பொருளாதார சீர்திருத்தமே.

சீனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப். அருகாமை நாடுகளாக கனடா உள்ளிட்டவையும் டிரம்பின் பார்வையில் தப்பவில்லை. இதனால் அமெரிக்க பொருட்களுக்கு கனடா பல மடங்கு வரியை விதித்துஉள்ளது. சீனா இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்ததும், அமெரிக்க பொருட்களுக்கு சீனா பல மடங்கு வரியை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சீனாவைப் போன்று ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளும் அமெரிக்காவை ஏமாற்றி வருகின்றன எனக்கூறி அங்கிருந்து வரும் கார் உள்ளிட்டவைகளுக்கு கூடுதலாக 20 விழுக்காடு வரிவிதிப்பை டிரம்ப் அறிவித்தார். இதற்கு எதிர்வினையாக அமெரிக்க தயாரிப்பு ஜீன்ஸ், ஹார்லி டேவிட்சன் பைக் உள்ளிட்டவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பலமடங்கு வரியை அதிகரித்தது. தங்களின் முதன்மைச் சந்தையான ஐரோப்பிய பகுதியில் விற்பனை பாதிக்கப்படுவதை தவிர்க்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஐரோப்பிய நாட்டில் தனது உற்பத்தியை தொடங்க உள்ளதாக அறிவித்தது. 

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், அவர்கள் பென்ஸ் காரை நமக்கு அனுப்புவார்கள், ஆனால் உணவு பொருட்களை தர மாட்டார்கள். நம் உழவர்களுக்கு என்ன செய்துள்ளனர். நமக்குதேவையான உணவை நாம் தயாரித்துக்கொள்வோம் 

என கீச்சு பதிவிட்டார்.

இதையடுத்து டிரம்பின் கொள்கை அமெரிக்க பொருளாரத்தை அழித்துவிடும் என ஐரோப்பிய ஒன்றியம் கடிதம் மூலம் எச்சரித்துள்ளது. டிரம்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன் கிளாட் ஜுங்கர் எழுதிய கடிதத்தை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு 294 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்கிறோம். அமெரிக்காவின் இறக்குமதியில் இது 19 விழுக்காடு. அமெரிக்க சாலைகளில் ஓடும் பல கார்கள் எங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளே. அமெரிக்காவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் 2.9 மில்லியன் தயாரிப்புகளை அளித்துள்ளன. இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 29 விழுக்காடு ஆகும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அமெரிக்காவில் கிடைத்துள்ளன. எங்கள் நிறுவனங்கள் தெற்கு கரோலினா, அலபாமா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்களில் உள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கை அனைத்தையும் புரட்டிப்போடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே கொள்கையில் டிரம்ப் செயல்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் அழியும். இதை செனட்டர்கள் கவனத்தில் கொண்டு கொள்கை மாற்றத்தை உருவாக்க செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளார். ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 28ம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.

டிரம்ப் மேற்கொண்டுவரும் வரி விதிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த கடிதம் மேலும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் வணிகத் தொடர்பை விரித்த உலகின்முதல் நாடு தமிழகம். அடுத்தது ஐரோப்பிய நாடுகள்; குறிப்பாக இங்கிலாந்து. 

ஏற்றுமதியால் நடத்தும் பிழைப்பு நிரந்தரமானதல்ல. உலகை முழுவதும் ஆண்ட இங்கிலாந்து தொடர்ந்து ஆள முடியாமல் இன்று சுருங்கிப் போய்விட்டது. 

உலகம் முழுவதும் கடலோடி வணிகம் புரிந்த தமிழகம் தனக்கு என்று ஒரு நாட்டை தமிழீழத்தில் கூட தக்க வைக்க  முடியவில்லை. டிரம்பின் இந்த நடவடிக்கை நெடுங்காலம் தொடருமானால் அங்கே பொருளாதாரப் புரட்சி உண்டாகும் தற்சார்பு அமெரிக்கா உருவாகும்; வந்தாரை வாழ வைக்கும் அமெரிக்கா காணாமல் போகும். நீங்கள் செய்வது உங்கள் நாட்டுக்கு நல்லதுதான் டிரம்ப். உங்களைப் பார்த்து உலகம் கற்றுக் கொண்டால் உலகத்திற்கே நல்லது டிரம்ப்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,837.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.