Show all

மலரும் நினைவாய் மீட்டிய இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்! விடுதலை புலிகள் காலத்து இலங்கையை

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற குடிஅரசுதலைவரின் மக்கள் சேவை எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்ட தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, 

'நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும். என்று தெரிவித்தார்.

அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று குடிஅரசுதலைவர் தனது கட்சியை வளர்கின்றார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை.

நாங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னம் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்' என்றார்.

குடிஅரசுதலைவர், தலைமை அமைச்சர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் வடக்கு மாகாண அவை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,836.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.