Show all

அதிமுகவிலிருந்து கே.சி.பழனிசாமி நீக்கம்! நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என கருத்து சொன்னாராம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அதிமுகவிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை நீக்கி எடப்பாடி- பன்னீர் அறிவித்துள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்காக இந்த நீக்கம் என தெரியவந்துள்ளது.

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் கே.சி.பழனிசாமி. இவர் இன்று மாலை திடீரென அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கட்சியின் அடிமட்ட பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி- பன்னீர் அறிவித்தனர். பன்னீரின் தீவிர ஆதரவாளரான கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர் கே.சி.பழனிசாமி. முத்த அரசியல்வாதியான கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து பன்னீர் பிரிந்து தனி அணியாக இயங்கியபோது அவருக்கு பெரிதும் உறுதுணையாக அந்த அணியில் இருந்தவர். அதன் செய்தி தொடர்பாளராக இருந்தவர். பின்னர் அணிகள் இணைந்த பின்னர் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் செய்தித் தொடர்பாளராக அப்படியே தொடர்ந்தார்.

அதிமுகவின் நிலையை ஊடகங்களில் சிறப்பாக பேசக்கூடியவர் கே.சி.பழனிசாமி. ஜெயா தொலைக்காட்சி தினகரன் அணி பக்கம் இருப்பதால், அதிமுக சார்பில் அம்மா தொலைக்காட்ச முயற்சி எடுத்தபோது அதற்கு பொறுப்பு கே.சி.பழனிசாமிக்கு ஒதுக்கப்பட இருந்தது. பின்னர் அது அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி கைக்கு மாறியது.

இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கே.சி.பழனிசாமி நிகழ்ச்சியில் பேசும் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடுவண் அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தினைப் பற்றிய கேள்விக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து அதிமுகவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் என்கிற தொனியில் பதிலளித்திருந்தார்.

அதன் பொருட்டே கே.சி.பழனிசாமியை நீக்கி எடப்பாடி- பன்னீர் அறிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,728.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.