Show all

செயலலிதாவின் புகைப்படம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு அறிக்கை

முன்னாள் தமிழக முதல்வர் செயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு இன்று திங்கள்கிழமை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

     திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை ஒன்றிணைத்து நடைபெற்று வரும் இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிஅரசர் ரமேஷ் மற்றும் நீதிஅரசர் மகாதேவன் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது.

     இந்திய உச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலங்களிலுருந்து அகற்ற வேண்டும், அரசு விழாக்களில் பயன்படுத்தக்கூடாது,

அம்மா- என்கிற செயலலிதாவை குறிக்கும் பெயரில் அரசு திட்டங்களை அறிவிக்க கூடாது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெயர்களை மாற்ற வேண்டும், செயலலிதாவின் நினைவிடத்தில் அரசு செலவில் மண்டபம் எழுப்பக்கூடாது போன்ற கோரிக்கைகளும் மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

     திமுகவின் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வில்சன் இன்று இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய போது, ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செயலலிதா பற்றிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய ஆளும் அதிமுக அரசு முயற்சி செய்வதாகவும், அதை தடுத்து நிறுத்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

     பாமக தரப்பில் இந்த வழக்கில் இன்று ஆஜராகி வாதாடிய சமூக நீதி வழக்கறிஞர் அமைப்பின் தலைவரான பாலு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் 69 ஆம் பிறந்த தினத்தில், அரசு செலவில் அவரது புகைப்படத்துடன் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரம் செய்யப்பட்டது குறித்தும் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டகாக குறிப்பிட்டார்.

     மேலும், தமிழகத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, கடந்த 20 ஆம் தேதியன்று,

“அம்மா இருசக்கர வாகனத்திட்டம்”

என்கிற பெயரில் திட்டத்தை அறிவித்துள்ளது தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டதாக வழக்கறிஞர் பாலு கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.