Show all

அதிமுகவினது வெற்றியாம்! திமுக பெற்றுள்ளது வெற்றியல்லவாம் தோல்வியாம். வேலூர் தேர்தல் முடிவு குறித்து பரவும்செய்தி

வேலூர் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திமுக பெற்றது வெற்றியல்ல வென்றும், அதிமுகவினது வெற்றியென்றும் பரவலாக செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது. அதிமுகவினரும் இந்த வகையாகவே உற்சாகம் அடைந்து வருகின்றனர். இது திமுகவிற்கு எதிர்மறை செய்தி போல தோன்றினாலும் உண்மையில் திமுகவின் வளர்ச்சிக்கான செய்திதான் இது. ஸ்டாலின் கோபப்பட்டு கொந்தளிக்காமல் கருத்தில் கொள்ளுவது நல்லது. 

25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளர்கள், ஓரிருவரைத் தவிர, அனைவரும் லட்சக்கணக்கான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றனர். திமுக கூட்டணிக்கு, 51 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன. அதிமுக கூட்டணிக்கு, 18 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன.

இதனால், திமுகவினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அடுத்து, எப்போது தேர்தல் வந்தாலும், திமுக ஆட்சி தான் என்று பெருமிதப்பட்டனர். எனவே, வேலூர் பாராளுமன்றத் தேர்தலில், நான்கு லட்சம் வாக்குகள், வேறுபாட்டில் வெற்றி பெறலாம் என, எதிர்பார்த்தனர். ஆனால், திமுக 8,141 வாக்குகள் வேறுபாட்டில்தான் வெற்றி பெற்றுள்ளது. 

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தோல்வியால், அதிமுகவினர் துவண்டு போயிருந்தனர். வேலூர் தேர்தலில், வெற்றி பெறாவிட்டாலும், கடும் போட்டியை கொடுத்ததும், வேறுபாட்டைக் கணிசமாக குறைத்ததும், அதிமுகவினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து வரும் தமிழகப் பொதுத்தேர்தலில், தோல்வியை முன் வைத்தே போட்டியிட வேண்டிய நிலையில் உள்ள அதிமுகவை விட, உறுதியான வெற்றியை முன் வைத்து போட்டியிட வேண்டிய உறுதியான வாய்ப்புகள் உள்ள திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை திமுகவிற்கு அறிவிக்கிறது வேலூர் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,240.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.