Show all

370 நீக்கத்தை கண்டித்து காஷ்மீர் மாணவர்களின் போராட்டம்! ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் ஒன்று கூடிய காஷ்மீர் மக்கள்

“370 எங்கள் அடையாளம், அது இந்தியவுடனான சமூக ஒப்பந்தம். அது நீக்கப்பட்டது துரோகம். காஷ்மீர் மக்கள் இதை ஏற்கவில்லை” என்று மாணவர்களும் ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் ஒன்று கூடிய காஷ்மீர் மக்களும் நேற்று வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைக் கண்டித்தும், அங்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை எதிர்த்தும் வாயில் கருப்புத்துணி அணிந்து ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் டெல்லியில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் ஜம்மு காஷ்மீரைச் சார்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

அவர்கள் பல்வேறு எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் நடுவில் ஓர் மாணவி அழுதுகொண்டிருந்தார். அவர், தான் டெல்லியில் ஜாமிய மிலியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகவும் காஷ்மீரில் இருக்கும் தன் குடும்ப நபர்களிடம் பேசி ஐந்து நாட்கள் ஆகிறது என்றும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பயமாக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்தச் செயலால் காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் தெரிவித்தார்.

வளர்ச்சியின்மைக்கு சட்டம் 370ஐ காரணம் காட்ட முடியாது பிகார் போன்ற மாநிலங்கள் முன்னேறாததற்கு என்ன காரணம்? பிகாரில் என்ன 370 உள்ளதா என்றும் வினவினார்.

370 எங்கள் அடையாளம், அது இந்தியவுடனான சமூக ஒப்பந்தம். அது நீக்கப்பட்டது துரோகம். காஷ்மீர் மக்கள் இதை ஏற்கவில்லை. அவர்கள் அங்கு போராட முற்படுகிறார்கள் என்றும் அதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றும் அங்கிருந்து வந்த நபர்கள் மூலம் தெரிந்து கொண்டோம் என்று போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு மாநிலத் தகுதி கேட்பார், ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில தகுதி பிடுங்கலை ஆதரிப்பார். அவர் ‘இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு’ என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்ற கருத்துக்களும் அங்கே தெரிவிக்கப் பட்டது. மேலும், இந்த நடவடிக்கை யாரிடம் கேட்டு எடுக்கப்பட்டது? எங்களிடமா இல்லை எங்கள் பிரதிநிதியிடமா? ஆளுநரிடம் ஒப்புதல் பெற கவர்னர் என்ன எங்கள் பிரதிநிதியா?" என்று கேள்விகள் எழுப்பினார். 

எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் பாஜக நடுவண் அரசு 370 குறித்து எந்த மறுபரிசிலனையும் செய்;யாது என்பது உறுதியோ உறுதி. வேறு கட்சிகள் ஏதாவது தேர்தல் வாக்குறுதி அளித்து, 370ஐ தொடர்ந்து அமுல் படுத்துவோம்; அதுவும் அரசியல் ஆய்வறிஞர்கள் தெரிவிப்பது போல அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் 370 தகுதியை வழங்குவோம் என்று அறிவித்து தேர்தலில் வென்ற பிறகு முன்னெடுத்தால் மட்டுமே உண்டு. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,240.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.