Show all

தினகரன் அறிமுகம்! யார் அதிமுக என்ற மக்களின் தேர்வில், தன்னையும் இணைத்துக் கொள்வதற்கான அணியை

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: யார் தலைமையில் இருக்கிற அணி உண்மையான அதிமுக? இதற்கான பதிலை யார் சொல்ல முடியும் என்று யாருக்கு புரிந்திருக்கிறதோ அவரைச் சார்ந்திருக்கிற அணிதானே அதிமுகவாக இருக்க முடியும். 

பன்னீர் செல்வத்திற்கும் சரி, எடப்பாடிக்கும் சரி இதற்கு விடை தெரிய வில்லை என்பதை நிரூபணம் செய்து விட்டார்கள். நான்கு ஆண்டு ஆட்சிதான் அவர்களுக்கு பெரியதாகத் தெரிந்ததேயொழிய ஆட்சியைத் தந்த தமிழ் மக்கள் குறித்து பெரிதாகப் புரிதல் இல்லை என்பதை அவர்கள் தெளிவாக நிரூபணம் செய்து விட்டார்கள். 

செயலலிதா இருந்த போது அவரின் தோழியான சசிகலா, அதிமுகவினருக்கு செயலலிதாவின் தோழியாகத் தானே தெரிந்தார்கள்! செயலலிதா வீட்டு வேலைக்காரியாக இல்லையே?

தமிழ்மக்கள் செயலலிதா மீது இருந்த சொத்துக் குவிப்பு வழக்கை ஒப்புக் கொள்ளவேயில்லையே! சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டு இருந்த போதுதானே, அதிலிருந்து அவர் முழுமையாக விடுபட, இந்தியத் தலைமை அமைச்சரை தேர்வு செய்கிற தகுதி செயலலிதாவிற்கு இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே நாற்பதும் நமதே என்று செயலலிதா அவர்கள் கேட்ட போது தமிழ் மக்கள் கொடுத்தார்கள். 

செயலலிதாவிற்கு அறங்கூற்று மன்றம் ஒருமுறை தண்டனை ஒரு முறை விடுதலை கொடுத்த போது, விடுதலையை செரிமானம் செய்து கொள்ள முடியாமல், செயலலிதா மரணத்திற்குப் பின்பும் அவசர அவசரமாக சசிகலாவிற்கு மட்டும் வழங்கப் பட்ட தண்டனையை யார் வேண்டுமானாலும் எப்படியும் சொல்லட்டும். தமிழ்  மக்கள் அரசியல் சதியில் கிடைக்கப் பெற்ற தீர்ப்பு என்று கருதி அவர்கள் ஒரு தீர்ப்பைத் தருவார்கள் என்ற நம்பிக்கை ஏன் பன்னீருக்கும், எடப்பாடிக்கும் புரியவில்லை. 

தொடக்கத்தில் பன்னீருக்கு எதிராக சசிகலாவை நம்பிய எடப்பாடியை மாற்றியது யார்? யார் உண்மையான அதிமுக என்று சொல்லுவதற்கான தகுதியுள்ளவர்களாலா? 

பாஜகவையும், எதிர்கட்சிகளின் அவதூறுகளையும், பாஜக அரசு இயற்றும் சட்டப்படி இயங்குகிற அறங்கூற்று மன்றத்தையும் அல்லவா அவர்கள் நம்பி தங்களை அதிமுக என்ற நம்பி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் தினகரன் மட்டுமோ- ‘யார் அதிமுக என்று’ தமிழ் மக்களால் மட்டுமே நிரூபணம் செய்யமுடியும் என்பதைப் புரிந்து கொண்டு தன்னை அந்தத் தலைமைக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். 

அதற்காக மதுரையில் நாளை தனது தலைமையின் கீழ் ஒரு அணியை உருவாக்கிட, கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைப்பதையொட்டி தினகரன் புதிய அணியை தொடங்குகிறார். யார் அதிமுக என்ற மக்களின்  தேர்வில், தன்னையும் இணைத்துக் கொள்வதற்கான அணிக்கான கட்சிக்கொடியை தினகரன் அறிமுகம் செய்து வைக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,726.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.