Show all

ஏப்ரல் 12ல் இராதா கிருட்டிணன் நகர் இடைத்தேர்தல்

செயலலிதா மறைவை அடுத்து காலியாக உள்ள இராதா கிருட்டிணன் நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

     இதனையடுத்து தேர்தல் விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை இராதா கிருட்டிணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று முதல்வரானார் செயலலிதா.      உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 75 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பாமலேயே டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இதனால் இராதா கிருட்டிணன் நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்ப்பார்பிற்கிடையே இன்று தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

     வேட்புமனுக்கள் மார்ச் 23ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 27ஆம் தேதி கடைசி நாளாகும்.

     வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, சென்னை மாவட்டம் முழுவதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.      இதனால் சென்னை மாவட்டம் முழுவதற்குமே அரசு திட்டங்களை அமல்படுத்த முடியாது. மேலும், அமைச்சர்களின் பயணம், வாகனக் கருத்துப் பரப்புதல், விளம்பரம், அரசு விருந்தினர் மாளிகையை பயன்படுத்துதல், அதிகாரிகள் பணியிடமாற்றம் என எதையும் மாநில அரசு செய்யக் கூடாது.

     இடைத்தேர்தலில் அனல் பறக்கும் கருத்துகள் அள்ளித் தெளிக்கப்படும்.

     இது ஒற்றைத் தொகுதிக்கான தேர்தலாக இல்லாமல் அனைத்துக் கட்சிகளுக்குமான திருப்புத் தேர்வாக அமையும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.