Show all

பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் திறன்பேசி நிறுவனம் தொடங்கும் சல்மான் கான்

பிரபல வடஇந்திய நடிகர் சல்மான் கான் சொந்தமாக திறன்பேசி வியாபாரம் துவங்க இருக்கிறார். பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

     பிரபல வடஇந்திய நடிகரான சல்மான் கான் இந்தியாவில் புதிய திறன்பேசி நிறுவனம் துவங்க இருக்கிறார். பீயிங் ஸ்மார்ட் என்ற பெயரில் தனது நிறுவன உற்பத்திகளுக்கான சின்னத்தை சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.

     பீயிங் ஸ்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள திறன்பேசி சந்தையின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வரும் நிர்வாகிகளை சேர்ந்த புதிய குழு ஒன்றை உருவாக்கி வருவதாக சாம்சங், மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களை சேர்ந்த இரு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

     ஆடைகளை விற்பனை செய்ய பீயிங் ஹியூமன் என்ற நிறுவனத்தை சல்மான் கான் ஏற்கனவே நிர்வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பீயிங் ஸ்மார்ட் நிறுவனத்தின் கீழ் திறன்பேசிகளை தயாரிக்க சீனாவை சேர்ந்த ஆலையை ஏற்கனவே தேர்வு செய்துள்ளதாகவும், இவற்றில் ரூ.20,000-க்கும் குறைந்த விலையிலான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் தயாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

     இந்தியாவில் சல்மான் கானின் பீயிங் ஸ்மார்ட் நிறுவனம் ஒப்போ, விவோ மற்றும் சியோமி உள்ளிட்ட சீன திறன்பேசி நிறுவனங்களுடன் போட்டியிடும்.

     இதே போல் மைக்ரோமேக்ஸ் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்களும் பீயிங் ஸ்மார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் என பீயிங் ஸ்மார்ட் அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

     முதற்கட்டமாக பீயிங் ஸ்மார்ட் நிறுவனத்தின் திறன்பேசிகள் இயங்கலையில் விற்பனை செய்யப்படும். பின்னர் ஒப்பந்த அடிப்படையில் சில்லறை வர்த்தகர்கள் மூலம் விற்பனை செய்யப்படும். ஆனால் இது குறித்து சல்மான் கான் சார்பில் எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.