Show all

திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பதாகைகளை அகற்ற ஆணை

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று திருச்சியில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் அனுமதியின்றி நூற்றுக்கணக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கப்பட்டது குறித்து டிராபிக் ராமசாமி உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா பெயரில் அமைக்கப்படும் பதாகைகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. உடனடியாக அகற்ற கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆகவே அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர்கள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அமர்வு அனுமதியுடன் வைக்கப்பட்ட பதாகைகள் எத்தனை, அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகள் எத்தனை எனபது குறித்து மாலைக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். மாலை அரசு தரப்பில் அணியமான வழக்கறிஞர் விஜய்நாராயண் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 220 பதாகைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, 20 பேர் அனுமதி பெற்றுள்ளனர். அனுமதி பெறாத பதாகைகள் எதுவும் இல்லை, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றிவிடுவதாக தெரிவித்தார்.

ஆனால் இதை ஆட்சேபித்த டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் அனுமதி இன்றி அதிக அளவில் பதாகைகள் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தனர். ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதிலிருந்தே அனுமதி அளிக்காமல் அவை வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வருகிறது. முறையின்றி வைக்கப்படும் பதாகைகளை வரைமுறைப்படுத்த வேண்டி உள்ளது என்று தெரிவித்து, உடனடியாக பதாகைகளை நாளைக்குள் அகற்ற உத்தரவிட்டு திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.