Show all

தமிழகத்தில் வடிக்கப்பட்டுவரும் மிகஉயர முருகன்!

தனிநபர் முத்து நடராசர் முயற்சியால், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகனுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. மலேசிய முருகன் சிலையை விட மேலும் ஆறு அடி அதிக உயரம்.

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்மெய்யியல் முதலெனப் படுவது இடமும் காலமும் என்கிறது. 
1.நிலம், நீர், தீ, காற்று இந்த நான்கையும் இடத்தின் அடுத்த பரிமாணம் என்கிறது. விசும்பை காலத்தின் அடுத்த பரிமாணம் என்கிறது. 
2.நிலம், நீர், தீ, காற்று இந்த நான்கையும் போற்று பொருளாக இறை என்கிறது. விசும்பை போற்று பொருளாக கடவுள் என்கிறது. 

3.அண்டத்தில் இருப்பது பிண்டத்தில், பிண்டத்தில் இருப்பது அண்டத்தில் என்ற வகையில் இறையையும், கடவுளையும் உள்வாங்கிய அன்பு, ஆளுமை நிறைந்த மனிதர்களைப் போற்று பொருளாக தெய்வம் என்கிறது.

இயற்கையைத் தான்தோன்றியாக பார்க்கிறது தமிழ்மெய்யியல். இயற்கை ஒரு தெய்வ ஆற்றலால் படைக்கப் பட்டது என்கின்றன உலக மதங்கள். இயற்கை தோற்றத்தை ஆர்கானிக் எவல்யூசன் என்கிறது ஐரோப்பிய விஞ்ஞானம்

ஆளுமை மகுதி அடிப்படையில் நிலத்தை ஐந்திணைப் பகுதிகளாக பிரிக்கிறோம் தமிழர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன. 

அவைகளில் விசும்பின் ஆளுமை மிகுதியானதுதான் குறிஞ்சி. குறிஞ்சி நிலத் தெய்வம் சேயோன். அந்தச் சேயோன் தெய்வத்தை முருகன் என்ற பெயராலும் தமிழர் போற்றுகின்றனர்.  

தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறியிருக்கும் இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி போற்றி கொண்டாடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பத்துமலைக் குகைக் கோயில் மிகவும் பிரபலமானது.

இயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைதான், இதன் புகழுக்குக் காரணம். இந்த பிரமாண்ட முருகனை கண்டு மகிழ்வதற்கும் கொண்டாடுவதற்கும் ஆர்வலர்கள் மலேசியாவிற்குச் செல்கின்றனர்.

ஆனால் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகனுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. மலேசிய முருகன் சிலையை விட மேலும் ஆறு அடி அதிக உயரம்.

சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது, புத்திரகவுண்டம்பாளையம் கிராமம். இங்குதான், தனிநபர் முத்து நடராசர் முயற்சியால் 146 அடி உயர பிரமாண்ட முருக தெய்வத்திற்கான சிற்பம் தயாராகிவருகிறது.

இதில் சிறப்பு என்னவென்றால், கோலாலம்பூரில் 140 அடி உயர சிலை அமைத்த அதே திருவாரூர் தியாகராசன் சிற்பிதான், இந்த புத்திரகவுண்டம்பாளையம் முருகன் சிலையையும் செய்துவருகிறார். முருகனின் சிலை மட்டும் 126 அடி. பீடத்துடன் சேர்த்து 146 அடி உயரம் இருக்கும் என்கிறார் சிற்பி.

இந்தப் பணியில் 22 சிற்பிகள், 10 உதவியாளர்கள், ஈடுபட்டு வருகிறார்கள். மலேசியாவில் வடிக்கப்பட்ட சிலையில், முருகன் வலதுகையால் வேல் பிடித்ததுபோல காட்சி தருகிறார். இங்கு, புத்திரகவுண்டம்பாளையத்தில் வடித்துவரும் சிலையில், முருகப்பெருமான் வலது கையால் அருள் வழங்குவது போன்றும், இடது கையால் வேலைத் தாங்கியபடி சிரித்த முகத்துடன் மணிமகுடம் சூடி காட்சிதருவதைப்போன்று அமைத்து வருகின்றார்கள்.

புத்திரகவுண்டம்பாளையத்தில் முருகன் சிலையை அமைக்க முயற்சி எடுத்தவர், முத்து நடராசர். அகவை மூப்பின் காரணமாக இவர் இயற்கை எய்திய நிலையில் அவரது குடும்பத்தினர்தான் தற்போது கோயில் அமைக்கும் பணியைச் செய்துவருகிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாலைக்கால் ஊன்றி கட்டுமானம் தொடங்கப் பட்டது. தந்தையின் விருப்பப்படி, அடுத்த ஆண்டு பங்குனி உத்திரத்துக்கு முன்பு, குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிந்த பிறகு, அறுபடை முருகன் சிலைகளையும் இங்கு அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கிறார்கள்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.