Show all

ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்: தி.மு.க செயல் தலைவர்

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டு கால மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. பா.ஜ.க அங்கு ஆட்சி அமைக்க உள்ளதைத் தொடர்ந்து தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க-வினர் வன்முறையைக் கையிலெடுத்துள்ளனர். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை அடித்து நொறுக்கி, தொண்டர்களையும்  தாக்கினர். மேலும், பிரதான இடத்தில் இருந்த லெனின் சிலை புல்டோசரால் தகர்க்கப்பட்டது. 

இந்நிலையில் இதைப்பற்றி பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை தன்னுடைய முகநூல் பக்கத்தில், ‘திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ராமசாமி சிலை’ எனப் பதிவிட்டிருந்தார். ஹெச்.ராஜாவின் பதிவு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தி.மு.க செயல் தலைவர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறும் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் ஹெச்.ராஜா பேசி வருவது கண்டிக்கத்தக்கது. பெரியார் சிலையைத் தொட்டுப்பார்க்ககூட யாருக்கும் தகுதி கிடையாது’ எனக்  காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வி.சி.க தலைவர் திருமாவளவன் ‘பெரியார் சிலையைத் தொட ஹெச்.ராஜா மட்டுமல்ல அவருடைய முப்பாட்டன் வந்தாலும் முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ‘நாளை என்ன நாளை, வீராதி வீரர்கள் இன்றே பெரியார் சிலை மீது கைவைத்துப் பார்க்கட்டும்’ என்று ஹெச்.ராஜாவுக்கு நேரடி சவால்விடுத்துள்ளார். 

இணையப் இடுகையாளர்கள் ஹெச்.ராஜாவின் கருத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் பெரியார் சிலை பற்றிய பதிவு ஹெச்.ராஜா  முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

எச்.ராஜாவை சிறையிலடைக்க என்ன தடை! தப்பியோட முயன்றால்... துரத்திப் பிடிப்பதற்கும் எடப்பாடி- பன்னீர் அரசில், காவல்துறைக்கு என்ன அச்சம்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,718.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.