Show all

சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழ் வாங்கிய முதல் பெண்! செய்தி தமிழிசை, இராஜவிற்கு தெரியாமல் மறைத்தால் தேவலாமே!

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவிலேயே முதன் முறையாக சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழை வேலூர் திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்பவர் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பார்த்திப ராஜா. இவருடைய மனைவி சினேகா அகவை 21. இவர்களது குடும்பத்தினர் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். இந்நிலையில், சினேகா எந்த சாதி, மதம் அற்றவர் என்று திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி சான்றிதழ் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சினேகா பெற்றார். 

இது குறித்து சினேகா கூறுகையில், 'என்னைப் பள்ளியில் சேர்க்கும் போதே என்னுடைய பெற்றோர்கள் எனக்கு எந்த சாதியும் இல்லை என்று சொல்லியே சேர்த்தார்கள். முதலில் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பள்ளி நிர்வாகம், தொடர் போராட்டத்துக்கு பின் சேர்த்துக் கொண்டார்கள். இதையடுத்து கல்லூரி வரையில் சாதி இல்லாமலே படித்தேன். 

எங்கள் குடும்பத்தின் மீது எந்த விதமான சாதி, மதச்சாயம் விழுந்த விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இதற்காகவே என்னுடைய உடன்பிறப்புகளுக்கு மும்தாஜ், ஜெனிபர் என்று பெயர் சூட்டப்பட்டது. என்னுடைய கணவர் பார்த்திப ராஜாவுக்கும் சாதி, மத அடையாளங்கள் எதுவும் கிடையாது. எனவே, சாதி மதமற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு அளித்தேன். தற்போது பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளது' இவ்வாறு கூறினார். 

இதனால் தற்போது இந்தியாவிலேயே சாதி, மதமற்றவர் என அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமை சினேகாவுக்கு கிடைத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த வட்டாட்சியருக்கும் பாராட்டு தெரிவித்தாக வேண்டும். இதை அரசிதழில் பதிவு செய்வதற்கும் சம்பந்தப் பட்டவர்கள் முயற்சித்தல் சிறப்பு.

இது போன்று தங்களை அடையாளப் படுத்த விரும்பும் தமிழர்கள் நிறையவே இருக்கத்தான் செய்கிறார்கள். நடைமுறையில் இதற்கான வெற்றி குறித்து காலம்தான் தீர்மானிக்கும்.

இந்தச் செய்தியை தமிழிசைக்கும் எச்இராஜவிற்கும் தெரியாமல் மறைப்பதற்கு ஏதாவது வழியிருந்தால் தேவலாமே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,063.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.