Show all

பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் விற்பனைக்காக இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து இங்குள்ள மொத்த விற்பனை கடைகளில் பட்டாசுகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அனைத்து பட்டாசு கடைகளிலும் அதிக அளவில் பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. சிவகாசி-விருதுநகர் சாலையில் சின்னதம்பி நகரில் செல்வராஜ் நாடார் மகன் ஆனந்த் (38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்தக் கடைக்கு நேற்று மதியம் 1½ மணிக்கு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தயாரிக்கப்பட்ட வெடிகளை ஒரு மினி லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தனர். கடையில் இருந்தவர்கள், பட்டாசுகளை இறக்கி கடையின் உள்ளே வைக்கும்படி கூறிவிட்டு, அதற்கான இடத்தையும் காட்டினர். இதை தொடர்ந்து அந்த மினி லாரியில் வந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் பட்டாசு சிப்பங்களை கடையின் உள்ளே இறக்கி வைத்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக, மினி லாரியில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதனால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பட்டாசு சிப்பங்களை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். மினி லாரியில் இருந்த பட்டாசுகள் தொடர்ந்து நாலாபுறமும் வெடித்துச் சிதறியதால் லாரி தீப்பிடித்தது. பட்டாசு கடைக்குள் தீப்பொறி பறந்து விழுந்ததால், அங்கிருந்த பட்டாசுகளும் பல அடி உயரத்துக்கு தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசுகள் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெடித்துக்கொண்டே இருந்ததால், அந்த பகுதியில் ஏற்பட்ட கரும்புகை மண்டலம் பட்டாசு கடையின் பக்கத்து கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தை (ஸ்கேன் மையம்) சூழ்ந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் புகை மண்டலத்திற்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களும் ஓடி வந்து பரிசோதனை மையத்தின் பின் பகுதியில் உள்ள ஜன்னலை உடைத்து அதன் வழியாக 20-க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர். பட்டாசுகள் அனைத்தும் வெடித்து முடிந்ததும், தீயணைப்பு குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்தில் காயம் அடைந்து கிடந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் பலி ஆனார்கள். பட்டாசு கடையின் அருகே 2 ஆண்களின் உடல்கள் கிடந்தன. மேலும் மருத்துவ பரிசோதனை மையத்துக்குள் சென்று பார்த்த போது, அங்கு 6 பெண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானது தெரியவந்தது. அனைத்து உடல்களையும் காவல்துறையினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பட்டாசு ஏற்றி வந்த மினி லாரி முற்றிலும் எரிந்து நாசமானதோடு, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தன. இந்த வெடி விபத்தின் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன் இதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.