Show all

ஆம்பூரில் போலி மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

ஆம்பூரில் போலி மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போலி ஆவணங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில் சாலையில் வரும் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே காரில் ஆர்.டி.ஓ. என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அதில் அரசு வாகனம் பதிவு எண் கொண்ட ஒரு காரில் இருந்த நபர் சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒசூரில் இருந்து சென்னைக்கு செங்கல் பாரம் ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி, அதிக பாரம் ஏற்றப்பட்டுள்ளது என வழக்கு போடாமல் இருக்க ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன லாரி ஓட்டுநர் தன்னிடம் ரூ.5ஆயிரம் மட்டுமே உள்ளதாக கூறினார். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி விட்டார். இதேபோல் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு கிரானைட் கல் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரிடமும் ரூ.5 ஆயிரம் வசூல் செய்துள்ளார். இதே போன்று சாலையில் சென்ற பல வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை ஆம்பூர் அருகே உள்ள மாராப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் அந்த நபர் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக கோழித்தீவனம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை ஆம்பூர் அருகே உள்ள சோலூரை சேர்ந்த தண்டபாணி (44) என்பவர் ஓட்டி வந்தார். வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தவர் லாரியை நிறுத்தி, ஓட்டுநர் தண்டபாணியிடம் லாரிக்கு உண்டான ஆவணங்களை காட்டும்படி கேட்டுள்ளார். தண்டபாணி ஆவணங்களைக் காட்டியபோது, இது சரியில்லை என்றும், வழக்கு போடாமல் இருக்க ரூ.52 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு தண்டபாணி என்னிடம் உள்ள ஆவணங்கள் சரியாக உள்ளது பணம் தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் அவர், உனக்கு முன்பு வந்த வாகனத்திற்கு ரூ.60 ஆயிரம் வசூல் செய்துள்ளேன். உன்னால் தரமுடியுமா? அல்லது லாரியை எடுக்க முடியாத அளவுக்கு வழக்குப்பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனையடுத்து தண்டபாணி, தன்னால் பணம் தரமுடியாது என்று திட்டவட்டமாக கூறினார். அதைத் தொடர்ந்து அவர், தண்டபாணியை காரில் ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு வந்து தன்னை மோட்டார் வாகன ஆய்வாளர் என்றும், இவரது லாரியில் சரியான ஆவணங்கள் இல்லை எனவும் கூறி தண்டபாணியை ஒப்படைத்தார். அப்போது ஓட்டுநர் தனக்கு இவர் மீது சந்தேகம் இருப்பதாக காவல்துறையனரிடம் கூறியதை தொடர்ந்து உஷாரான காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பத்தூர் அருகே உள்ள கந்திலி, மேல்கனவன்வச்சம், கும்மிடியன்பட்டியை சேர்ந்த புஷ்பராஜ் (32) என்பதும், போலியான மோட்டார் வாகன ஆய்வாளர் என்பதும், பலரிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் இருந்து போலி ஆவணங்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். அப்போது அங்கிருந்த கார் ஓட்டுநர் பணத்துடன் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பயன்படுத்தும் ஆவணங்களை புஷ்பராஜ் போலியாக தயாரித்துள்ளார். மேலும் அதற்கான சீல்களையும் தயாரித்து பல நாட்களாக சோதனை என்ற பெயரில் பலரிடம் பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே சோதனை நடத்தியுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கேட்ட போது தான் சிறப்புபடை என்றும் கூறி ஏமாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.