Show all

கீழடியில் பழந்தமிழர் நகரம் புதைந்ததற்கான ஆதாரங்கள்; நடுவண், மாநில அரசுகள் அலட்சியமா!

கீழடி தொல்லியல் ஆய்வை தொடர்ந்து நடத்தவேண்டும் என தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், அமீர் மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆய்வுக்குரிய இடத்தை திங்கள்கிழமை காலை நேரில் பார்வையிட்ட அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழர்கள் உலகின் ஆதிகுடிகள் என்பதற்கான சான்று சங்க இலக்கியத்தில் உள்ளது. ஆனால், அதை ஆவணமாக உலகம் கருதவில்லை. ஆகவே, கீழடியில் பழங்கால நகரம் புதைந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில், கண்டறியப்பட்ட பொருள்களை காட்சிப்படுத்துவதை விட்டு, பெங்களூருக்கு அவற்றை கொண்டு செல்வதும், ஆய்வுக்குரிய இடத்தை மூடுவதும் சரியல்ல. தமிழர்கள் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறது. ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கீழடியிலும் தமிழர்களின் பாரம்பரிய ஆதாரங்கள் பாதுகாப்பதில் நடுவண், மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவது சரியல்ல. ஆதிச்சநல்லூரிலேயே முழுமையான ஆய்வுகள் நடத்தவில்லை. கீழடியிலாவது முழுமையாக அனைத்துப் பகுதியிலும் (சுமார் 110 ஏக்கர்) ஆய்வு நடத்தவேண்டும். அதற்கான தனியார் நிலத்தை அரசே விலை கொடுத்து வாங்கவேண்டும். திரைப்பட இயக்குநர்கள் சார்பில் தேவைப்பட்டால் ஆய்வுக்குரிய இடத்தை வாங்கித் தரவும் தயார். ஆகவே நடுவண், மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தவேண்டும். பாதுகாப்பு எனும் பெயரில் ஆய்வுக்காக தோண்டிய இடத்தை மூடுவது ஏற்கத்தக்கதல்ல. மூடிய இடத்தை பின்னர் எப்போது தோண்டி மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என விளக்கவேண்டும். தேவைப்பட்டால் இதற்காக போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றனர். மதுரை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கீழடி ஆய்வுக்குரிய இடத்தைப் பார்வையிட வந்திருந்தனர். அவர்களிடமும் திரைப்பட இயக்குநர்கள் தமிழர் நாகரிகச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடுவண் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுவரை 50 சென்ட் நிலத்தில் 102 குழிகள் மூலம் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் இருந்ததற்கான சுவர்கள், வீடுகளுக்கு பயன்படுத்திய கழிவு நீர் தடயங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்திய 71 சுடுமண் பானைஓடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வில் கிடைத்த அரிய பொருள்களையும், கீழடியின் ஆதிகால நகரையும் காட்சிப்படுத்த நிரந்தர கண்காட்சி மையம் அமைக்க அரசியல் கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழடியில் மூன்றாம் கட்ட மற்றும் தொடர் தொல்லியல் ஆய்வுக்கு நடுவண் அரசு அனுமதிக்கு தொல்லியல் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில் தற்போதைய ஆய்வுக்கு தோண்டப்பட்ட இடத்தை மூடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தொல்லியல்துறை ஆய்வுக்கு உரிய இடத்தை மூடுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என அத்துறை அதிகாரிகள் கூறினர். ஆதிச்சநல்லூர் ஆய்வுக்குப் பிறகு மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக கீழடி ஆய்வு கருதப்படுகிறது. கீழடியில்தான் 5300 பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. ஆய்வில் தொல்லியல் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர், 2 உதவியாளர்கள், 6 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். ஆய்வுக்காக இரண்டரை ஆண்டுகளில் ரூ.55 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கீழடியில் தொல்லியல் கண்காட்சியகம் அமைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆய்வுக்குரிய இடத்தை அதிகாரிகள் மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியது: தொல்லியல் ஆய்வு நிறைவுற்றதும் அதற்குரிய குழிகளை மூடுவது வழக்கமானது. மீண்டும் அதே இடத்தில் ஆய்வு நடத்தப்படமாட்டாது. ஆய்வில் கிடைத்த பொருள்களை பாதுகாக்க தொல்லியல் அலுவலகத்துக்கு கொண்டு செல்வோம். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதுகுறித்து வெளிப்படையாக கருத்து கூறுவது சரியல்ல என்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.