Show all

தினகரன் உறுதி! உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உரிய காலத்திற்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிடில் உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பின்படி,  நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்,  தஞ்சாவூர் திலகர் திடலில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. 

காலை 8 மணிக்கு உண்ணாநிலைப் பந்தலுக்கு தினகரன் வந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினார். தமிழக அனைத்து உழவர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உண்ணாநிலையைத் தொடங்கி வைத்தார்.

போராட்டத்தின் நிறைவில் தினகரன் பேசியது:

ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவிட்டு,  தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக வேறு பெயரில் குழு அமைப்பதாகக் கூறி, உழவர்களை நடுவண் அரசு வஞ்சிக்கப் பார்க்கிறது. கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து, நடுவில் ஆள்பவர்கள் நாடகமாடுகின்றனர்.  தமிழக அரசு கூறியுள்ளதைப் போல,  வரும் வியாழன் வரை பொறுத்திருப்போம். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் என்ன செய்யப் போகிறார்கள் என நாம் பொறுமையாகப் பார்ப்போம். இல்லையென்றால்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகி, உரிய தீர்வை பெறுவோம். உச்சஅறங்கூற்றுமன்றம்,  மேல்முறையீடு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளதால், மேல்முறையீடு செய்ய முடியாது என சிலர் கூறலாம். ஆனால்,  மறுசீராய்வு மற்றும் விளக்கம் கேட்பு மனு போடலாம். காவிரி பிரச்னை மட்டுமல்ல, பெரியாறு அணை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை, கூடங்குளம் அணு உலை பிரச்னை, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளாத, மக்களின் நலனுக்கு எதிரான அனைத்து பிரச்னைகளுக்காகவும்  போராடுவோம்.

வாக்குவங்கியை பற்றி கவலைப்படாமல்,  மக்களுக்காகப் போராடும் நம்மை நிச்சயம் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். வருங்காலத்தில் புதிய அரசியல் மாற்றத்தை,  புதிய அரசை உருவாக்கி, தமிழக மக்களுக்காக உழைத்து,  தமிழகத்தை இந்தியாவில் சிறந்த மாநிலமாக உருவாக்குவோம் என்ற ஜெயலலிதாவின் உறுதிமொழியை நிறைவேற்றிக் காட்டுவோம் என்றார் தினகரன். 

மாலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்,  தினகரனுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு,  காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி. ரெங்கநாதன் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி,  தங்கத் தமிழ்ச்செல்வன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி சி.ஆர். சரஸ்வதி,  தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உண்ணாநிலைப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் தினகரன் கூறியது:

நடுவண் அரசில்; ஆட்சி செய்யும் பாஜக அரசு,   ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்கிறது.  நீட் தேர்வு நடத்துகிறது. முத்தலாக் முறையை கொண்டு வருகிறது. கேட்டால்,  இவையெல்லாம் அறங்கூற்றுமன்ற உத்தரவு என்று கூறுகிறது. ஆனால்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சகூற்றுமன்ற உத்தரவை மட்டும் செயல்படுத்தாமல், காலம் தாழ்த்துகிறது.

நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை கழிமுகத்;தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், நிலக்கரி ஆகியவற்றை எடுத்து பாலைவனமாக மாற்ற பார்க்கின்றனர். இதைத் தடுக்க வேண்டிய தமிழக ஆட்சியாளர்கள்,  எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கின்றனர். இதே நிலை நீடித்தால், சோமாலியாவை போல  தமிழகம் மாறி விடும். மேலும்,  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்  வேலை தேடி பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும். 

இந்நிலை ஏற்படுவதற்குள் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்று சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட வேண்டும் என்றார் தினகரன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,738

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.