Show all

ஃபார்முலா1: முதல் சுற்றில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி

2018 ஆம் ஆண்டு ஃபார்முலா1  கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்பட இருக்கிறது. இந்த சீசனின் முதல் பந்தயமான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் மெல்போர்னில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது. இப்பந்தயத்தில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர். 

307.574 கிலோமீட்டர் தூரம் கொண்ட பந்தய இலக்கை செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 29 நிமிடம் 33.283 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 5.036 வினாடி மட்டுமே பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். முதலிடத்தை பிடித்த செபாஸ்டியன் வெட்டல் 25 புள்ளிகளும், இரண்டாம் இடம் பிடித்த லீவிஸ் ஹாமில்டன் 18 புள்ளிகளையும் பெற்றனர்.  இந்த போட்டி முழுவதுமே 4 முறை சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டலுக்கும் (பெராரி அணி),  நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனுக்கும் (மெர்சிடஸ் அணி) இடையே தான் கடும் போட்டி நிலவியது. 

கிமி ரெய்க்கோனன் மூன்றாவது இடம் பிடித்து 15 புள்ளிகளை பெற்றார். போர்ஸ் இந்தியா வீரர்களான செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகோன் (பிரான்ஸ்) முறையே 11, 12-வது இடத்தை பிடித்தனர். ஏப்ரல் 8-ஆம் தேதி பக்ரைனில் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.