Show all

உயிர்க்கொல்லி நீட் மூன்றாவது மாணவியின் உயிரையும் காவு வாங்கியது!

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு? எதை ஈடாகத்தரப் போகிறது நடுவண் அரசு? உயிர்க் கொல்லி நீட் சலனமில்லாமல், மூன்றாவது உயிரைக் காவு வாங்கியிருக்கிறது. கையறு நிலையில் வெட்கம் பிடுங்கி தின்ன வெறுமையில் தமிழக மக்கள்!

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உயிர்க்கொல்லி நீட் காவு வாங்கிய மூன்றாவது  மாணவி மோனிசா. நீட் தேர்வு  தோல்வி வழங்கியதால், விழுப்புரம் மாவட்டத்தில் மோனிஷா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைந்ததற்காக பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைசியா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இதே காரணத்துக்காக திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுசிறி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியிருக்கும் இந்த இரண்டு சோகச் சம்பவங்களிலிருந்தும் மீள்வதற்குள், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் இன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிசா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மோகன் அகவை 48. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்வர். இவருக்கு 3 மகள்கள். மூத்த மகளான மோனிசா, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பனிரெண்டாம் வகுப்பு படித்தார். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 690 மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் புதுச்சேரி உறுவையாறு பகுதியிலுள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் வேறு பயிற்சி எடுத்துள்ளார். நேற்று வெளியான நீட் தேர்வு முடிவு அவருக்கு தோல்வியான நிலையில், இன்று காலை தூக்கிட்டு உயிரிழந்திருந்தார் மோனிசா. 

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக இதே விழுப்புரம் மாவட்டத்தில் பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நிலையான தீர்வு நீட்டுக்கு பாடை கட்டுவது மட்டுமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,175.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.