Show all

குழம்பிக் கிடக்கிறது இலங்கை மக்களாட்சி! குற்றஞ்சாட்டுபவர்: இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்

அமைச்சர் பொறுப்பில் இருந்து நீங்க வேண்டுமென்று ஞானசார தேரர் சொல்கின்றார். அவர்களும் பதவியில் இருந்து நீங்குகின்றார்கள். ஏனெனில் பயம். அது மக்களாட்சியா என்று கேள்வி எழுப்புகிறார் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர், ரத்னஜீவன் கூல்.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் தற்பொழுது மக்களாட்சி மக்களாட்சியாக நிலை நாட்டப்படவில்லை. தேர்தல் நடைபெறவுள்ள நாளை தெரிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அது வேறு யாருக்கும் இல்லை. அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடத்த வேண்டி உள்ளது.  

அதற்கமைய நாங்கள் ஆலோசித்து கடந்த கிழமை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் போகும்போது ஒரு விடயத்தைச் சொல்லியிருந்தோம். அதாவது நவம்பர் மாதம் 15 க்கும் டிசம்பர் 7 க்கும் இடையில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று சொல்லியுள்ளோம். அதற்குள் நாங்கள் அதைத் தீர்மானிப்போம் என்றும் சொல்லியுள்ளோம்.

எங்களுடன் பேசி இரண்டு நாட்களின் பின்னர் குடிஅரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்குச் சென்ற போது இந்தியாவில் வைத்து டிசம்பர் 7 அன்று குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடக்குமென்று சொல்லியிருக்கிறார். ஆக நாங்கள் கொடுத்த காலம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரையான காலம்தான். ஆனால் தான் எவ்வளவு காலம் கூடுதலாக குடிஅரசுத் தலைவர் ஆக இருக்கலாமோ அதற்குத் தக்கதாக அவர் தேர்தல் நாளைக் குறித்திருக்கிறார்.

எமது அதிகாரத்தை குடிஅரசுத் தலைவர் அப்படிப் பறிக்கும்போது நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது. ஆகையினால் இத்தேர்தல் என்ன நாள் வைத்தாலும் சரி டிசம்பர் 7ல் வைக்கக் கூடாதென நான் தேர்தல் ஆணைக்குழுவில் சொல்லி இருக்கின்றேன். ஏனெனில் அது எங்களுடைய அதிகாரம் என்று காட்டுவதற்காகவே அவ்வாறு செய்ய உள்ளேன். 

இதை நாங்கள் கவனிக்காமல் விட்டு மரியாதைக்காக டிசம்பர் 7ல் தேர்தல் நடத்தினால் பின்னர் குடிஅரசுத் தலைவராக வருபவரும் எமது ஆணைக்குழுவின் வேறு அதிகாரங்களையும் பறிப்பார்.

ஆனாலும் குடிஅரசுத் தலைவர் என்ற முறையில் அவருக்கு மரியாதை இருக்கிறது. அதற்காக எங்கள் அதிகாரங்களை எடுத்து உபயோகிக்கக்கூடாது. சட்டத்தின்படி நாட்டை நடத்துவதுதான் மக்களாட்சி. சட்டம் இல்லாமல் மக்களாட்சி இல்லை. ஆக அந்த இடத்தில் இந்த குடிஅரசுத் தலைவர் மக்களாட்சியையே குழப்பிவிட்டார் என்று கூறுகிறோம்.

மக்களாட்சி முறையின் அடிப்படையில் நாங்கள் எங்கள் வாக்கை உபயோகித்து பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றோம். அவ்வாறு பிரதிநிகளைத் தெரிவு செய்த பின்னர் அவர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். எந்தக் கட்சிக்கு கூடிய இருக்கைகள் இருக்கிறதோ அந்தக் கட்சிதான் தலைமைஅமைச்சரை நியமிக்கிறது. அந்தக் கட்சிதான் குடிஅரசுத் தலைவருடன் ஆலோசித்து அமைச்சர்களை தெரிவு செய்கிறது. இதுதான் மக்களாட்சி.

அமைச்சர் பொறுப்பில் இருந்து நீங்க வேண்டுமென்று ஞானசார தேரர் (சிங்கள புத்த பிட்சு) சொல்கின்றார். அவர்களும் (முகமதிய அமைச்சர்கள்) பதவியில் இருந்து நீங்குகின்றார்கள். ஏனெனில் பயம். அது மக்களாட்சியா? என்று கேள்வி எழுப்பினார் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர், ரத்னஜீவன் கூல்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,175.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.