Show all

உலகக்கோப்பை 2019: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் இந்தியா வெற்றி

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது, இத்தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி இந்திய அணியில் சிறப்பான பந்து வீச்சால் சற்று நிதானமாகவே ஆடியது. சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்து கொண்டே இருந்ததால், தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளும் மற்றும் குல்தீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஒருவர் கூட அரை சதம் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோஹித் சர்மா, சிகர் தவான் முதலில் களத்தில் இறங்கினர். தவான் வெறும் 8 ரன்களும், விராட் கோலி 18 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும் அடுத்து வந்த ராகுல் மற்றும் டோனி நிதானமாக விளையாடி முறையே 26 மற்றும் 34 ரன்கள் குவித்தனர். இறுதியாக களமிறங்கிய ஹர்டிக் பாண்டியா, அதிரடியாக 7 பந்துகளுக்கு 15 ரன்கள் குவிக்க, இந்திய அணி 47.3 ஓவரில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரோகித் சர்மா 122 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.