Show all

தமிழ்நண்டுகளான திமுக அதிமுக, நடுவண் அரசில், ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிக்கு இனி சோரம் போகவேண்டாம்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திமுகவும், அதிமுகவும். தமிழ்நண்டுகள் கதையாக ஒருவரை ஒருவர் காலை இழுத்து விட்டுக் கொள்ளவும், நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிக்கு ஒருவரை ஒருவர் கோள்மூட்டிக் கொண்டு சோரம் போகவும், பயன்பட்டு வந்த இரண்டு வழக்குகள் இன்றோடு முடிவுக்கு வந்து விட்டன. இனிமேலாவது திமுகவும், அதிமுகவும் நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்கும் கட்சிக்கு சோரம் போவதை நிறுத்திக் கொண்டு, தமிழகத்தி;ன் அடிப்படைகளுக்கும், அடையாளமான தமிழ் மொழிக்கும் பாதுகாப்பு அரணாக, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு களத்தில் நெருப்பாக நிற்கலாம். அந்த வேடிக்கையான இரண்டு வழக்குகள் ஒன்று செயலலிதா அவர்கள் மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு. இரண்டாவது திமுகவினர் மீது போடப் பட்ட சிந்தனைக் குறைபாட்டுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு.

முதல் வழக்கு செயலலிதாவை காவு கொண்டு முடிவுக்கு வந்துள்ளது.

இரண்டாவது வழக்கு இன்று காலை 11 மணியளவில் தில்லி நடுவண் குற்றப் புலனாய்வு சிறப்பு அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ஓ.பி. சைனி அளித்த தீர்ப்பில், நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை, நடுவண் அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உட்பட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தார்.

குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க நடுவண் குற்றப் புலனாய்வு துறை தவறிவிட்டது என்று தெரிவித்துள்ள அறங்கூற்றுவர் ஓ.பி. சைனீ, 2ஜி வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த 3 நிறுவனங்களையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்பட 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால், நடுவண் அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் (ஏடிஏஜி) தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் அறங்கூற்றுமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.

மேலும், நடுவண் புலனாய்வுத் துறை தொடுத்த மற்றொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கேதான், அவரது கணவர் ஐ.பி. கேதான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரப் ஆகியோர் மீதும், அவர்கள் சார்ந்திருந்த நிறுவனங்கள் மீதும் நடுவண் புலனாய்வுத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

நடுவண் அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 10 பேர் மீதும், ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்டோரின்அனைத்துத் தரப்பு வாதங்களும் தில்லி நடுவண் புலனாய்வுத் துறை அறங்கூற்று மன்றத்தில் கடந்த நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நடுவண் புலனாய்வுத் துறை சிறப்பு அறங்கூற்;றுமன்ற அறங்கூற்றுவர் ஓ.பி. சைனி, குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து இன்று தீர்ப்பை வழங்கியுள்ளார்.

நடுவண் அரசில் பொறுப்பேற்கும் காங்கிரஸ், பாஜக இப்படி ஒருவரை ஒருவர் அடியோடு வீழ்த்திக் கொள்ளும் முயற்சியில் எல்லாம் ஈடுபடாமல் பலமடங்கு சம்பாதித்துக் கொண்டுதாம் இருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,643

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.