Show all

புரியாத புதிர்! ஊடகங்கள் மட்டுமே சலிக்காமல் எழுதிவரும் தமிழக மீனவர்கள் பிரச்சனையைத் தீர்க்கும் பொறுப்பு யாருடையது

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைச் சேர்ந்த 3000 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை நாட்டைச் சேர்ந்த கடற்படை துரத்தியடித்துள்ளது. நேற்று நடந்த இந்த சம்பவத்தின் போது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை கற்களைக் கொண்டு தாக்கியுள்ளது என்றும், பலரது வலைகளை கிழித்தெறிந்தது எனவும் குற்றம் சாட்டியுள்ளது மீனவ அமைப்பு.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய ராமேஸ்வரம் மீனவ சங்கத் தலைவர் சேசுராஜா, 'நேற்று காலை மண்டபம் மற்றும் இராமேசுவரத்திலிருந்து 700 இயந்திரப் படகுகள் மூலம் சென்ற மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களைக் கிளம்பிச் செல்லும்படி அச்சுறுத்தினர். அப்போது, 50 படகுகளிலிருந்து வலைகளை கிழித்தெறிந்தனர் கடற்படையினர். தொடர்ந்து அவர்கள் கற்களைக் கொண்டு மீனவர்களைத் தாக்கி கரைக்குத் திரும்ப வைத்தனர். இன்று காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள், மீன் ஏதும் இல்லாமல் வெறுங்கையுடன் கரைக்குத் திரும்பியுள்ளனர்.

தொடர்கதையாகியுள்ள இதைப் போன்ற சம்பவங்களுக்கு முடிவு கட்டும் வகையில் நடுவண் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவில் மின் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

செவ்வாய் கிழமை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.