Show all

உச்சஅறங்கூற்றுமன்றம் கடும் அதிருப்தி! பேரறிவாளன் வழக்கில் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை அறிக்கை மீது

ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை பதிகை செய்த பதில் அறிக்கை மீது கடும் அதிருப்தியை உச்சஅறங்கூற்றுமன்றம் வெளிப்படுத்தியுள்ளது.

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருபத்தொன்பது ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் பேரறிவாளன். இதனிடையே உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பேரறிவாளன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். 
அதில், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு மின்கலம் வாங்கி கொடுத்ததால் எனக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ராஜீவ் காந்தி பெல்ட் வெடிகுண்டு மூலம்தான் படுகொலை செய்யப்பட்டாரா? இந்த பெல்ட் வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது என்கிற விவரத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சஅறங்கூற்றுமன்றம் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை பதில் மனு பதிகை செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை தரப்பில் இன்று பதில் மனு பதிகை செய்யப்பட்டது. ஆனால் இதனை படித்து பார்த்த உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள், ஏற்கனவே நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை பதிகை செய்த விவரங்கள்தான் இதில் இருக்கின்றனவே தவிர புதிய விவரங்கள் எதுவும் இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும் புதிய விவரங்களுடனான அறிக்கையை நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை பதிகை செய்யவும் உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

இருபத்தொன்பது ஆண்டுகளாக பேரறிவாளன் நான் குற்றவாளி இல்லை என்று மறுப்பதும், விசாரித்தவர்கள் குற்றவாளிதான் என்று தெரிவிப்பதும், அறங்கூற்றுமன்றம் மாற்றி மாற்றி தீர்ப்பு வழங்குவதும், இராஜிவ் கொலைக்களத்தில் பலியான அப்பாவி காவல்துறையினரின் குடும்பங்கள்- இவர்தான் குற்றவாளி என்று முடிவு செய்து கொண்டு வெளியே விடக்கூடாது என்று போராடுவதும், இராஜிவ் கொலைக்களத்தில் ஒற்றை நபர்கூட இருந்திராத காங்கிரஸ்காரர்கள்- இவர் வெளியே வந்து விடக்கூடாது என்பது போல் போராடுவதும், பாஜககாரர்களோ இராஜிவ் கொலையை நேரில் பார்த்தவர்கள் போல்- பேரறிவாளன் உள்ளிட்டோரை எப்படி விடுவிக்க முடியும் என்று கேள்வி கேட்பதும், நீண்ட நெடிய விடுகதையே. விடுவிப்பார்களா விடுகதையை! அல்லது பேரறிவாளனை? கொஞ்சம் கூட நேர்மையோ, நியாயமோ புலப்படவில்லை என்று மக்கள் வருத்தப்பதிவை வெளியிடுகின்றார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,396.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.