Show all

இந்தக் காலப் பொண்ணுங்கக் கிட்ட வாலாட்டாதிங்கடா சங்கிலி திருடர்களே

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை, திருவொற்றியூர், ஈசாணிமூர்த்தி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மீனா, தனியார் கல்லூரி ஒன்றில் அறிவியல் இளவல் (BSc) இறுதியாண்டு பயின்று வருகிறார். ஞாயிற்றுக் கிழமை இரவு பெரியார் நகரில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடந்து சென்ற மீனாவை, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த சங்கிலிபறிப்பு கொள்ளையர்கள் இரண்டு பேர், மீனாவின் சங்கிலி மற்றும் கையில் இருந்த செல்பேசியைப் பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மீனா சற்றும் பதட்டமடையாமல் சங்கிலி கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கொள்ளையனின் சட்டை மீனாவின் கையில் வசமாக சிக்கிக் கொள்ள, பிடித்து கீழே தள்ளி சரமாரியாக தாக்க தொடங்கினார். சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வர பயந்து போன மற்றொரு கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடினான்.

மாணவி மீனாவின் பிடியில் இருந்த கொள்ளையனைத் தாக்கி பொதுமக்கள் தங்களது ஆத்திரத்தை தீர்த்து கொண்டனர். தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் காவலர்கள் காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், காவலர்கள் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர் , திருவொற்றியூர், ராஜாஜி சாலையை சேர்ந்த பாபு என தெரியவந்தது. கட்டிட தொழில் செய்து வரும் பாபு, தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொண்டு அப்பகுதியில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளான். தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இரவு நேரத்தில், ஆள் இல்லாத சாலையில் கொள்ளையர்களிடம் சிக்கி கொண்டோமே என அஞ்சாமல் கொள்ளையர்களை அடித்து கிழே தள்ளி காவலர்களிடம் பிடித்து கொடுத்த துணிச்சலான மாணவி மீனாவை அப்பகுதி மக்களும், காவல் துறை அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,612

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.