Show all

இயற்கையின் அறங்கூற்று தீர்ப்பு! மேட்டூர்அணையை நிரப்பத் துடிக்கும் முயற்சியில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் கனமழை.

ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் அத்துமீறி கட்டிவைத்துக் கொண்ட கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில்,  (கிருட்டினராசசாகர் அணை மட்டுமே அனுமதிக்கப்பட்ட அணை.) தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு காவிரியைத் திறந்து விட மறுப்பது கர்நாடக தொடர் அரசியல். இயற்கை அவர்களின் பிடரியில் அடித்து, ‘காவிரியை விடுவிக்கிறாயா அணையை இழக்கிறாயா என்று கேட்டு தமிழகத்திற்கு காவிரியை மீட்டுத் தருவது அறங்கூற்று. இந்த ஆண்டு இயற்கையின் அறங்கூற்று தீர்ப்பு ஆண்டு. 

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடகத்தின் காவிரி மறிப்பு அரசியலை முறியடித்து, அடிக்கடி காவிரியை தமிழகத்திற்கு மீட்டுத் தருவது இயற்கையின் அறங்கூற்று தீர்ப்பு.

அந்த வகையாக இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து வருகிறது. அதனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.

ஆடிப்பெருக்கு விழாவின் போது 51அடிகள் இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 68அடிகளாக உயர்ந்திருக்கிறது. பலமுறை ஆடி18ல் மேட்டூர் அணை நிரம்பாமல் போய் ஆடி28ல் மேட்டூர் அணை நிரம்பியது உண்டு. அந்த வகையாக இந்த முறை ஆவணி மாதப் பிறப்பிற்குள் அணை நிரம்பும் என்று, குறிப்பாக மேட்டூர்அணை மக்களாலும், சிறப்பாக தமிழக மக்களாலும் எதிர்பார்க்கப் படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகத்தின் அத்துமீறல் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 2.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,000 கனஅடியில் இருந்து 93,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 68 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளதால் வேளாண் பெருமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.