Show all

தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலம் குறித்து! பாஜக பேரறிமுகர் சுப்பிரமணியன்சாமியின் துல்லியக் கணிப்பு

தமிழ்நாட்டில் பாஜக முதல்வர் அத்தனை எளிதாக வந்துவிட முடியாது. முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து நின்று வெறுமனே ஐந்து தொகுதிகளில் வென்று காட்டட்டும். என்று தான் சார்ந்த கட்சியான பாஜகவிற்கு ஒரு வேலைப்பணியை (டாஸ்க்) தெரிவிக்கிறார் பாஜக பேரறிமுகர் சுப்பிரமணியன்சாமி.

28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: திமுகவுக்கு பாஜகவுடன் கமுக்க நட்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து, 'அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஒரு வாய்ப்பு வந்தாலும், திமுகவின் தலைவர்களுக்கு இடையே அதற்கு கடும் எதிர்ப்பு எழும்' என்று உறுதியாகத் தெரிவிக்கிறார் பாஜக பேரறிமுகர் சுப்பிரமணியன்சாமி.

செல்வாக்கான மாநிலக் கட்சிகளை அரசியல்பாடாக அச்சுறுத்த வழக்குகளைப் பயன்படுத்துவது தவறு அல்லவா? என்பது குறித்து, 'தவறுதான்! என்றாலும் நாம் பேசி என்ன ஆகப் போகிறது? இந்தக் கலாச்சாரம் இந்திரா காந்தி தனது ஆட்சியில் தொடங்கி வைத்தது. அடுத்தடுத்து வந்தவர்களும் அதையேதானே செய்தார்கள்? தக்க எதிர்ப்பு தெரிவித்தால்தான் யாரும் தங்களை மாற்றிக் கொள்ள முடியும்.' என்று தெரிவித்துள்ளார் பாஜக பேரறிமுகர் சுப்பிரமணியன்சாமி.

பொன்னியின் செல்வன் திரைப்படம் உட்பட ஹிந்து மதம் குறித்து தமிழ்நாட்டில் கிளம்பி உள்ள விவாதங்கள் எந்தக் கட்சிக்கு அரசியல்பாடாக லாபமாக முடியும்? என்பதற்கு, 'தென்னிந்திய நிலப்பகுதியின் மக்கள் அனைவருமே திராவிடர்கள்தான். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பேர் வாரணாசிக்கு வந்து கங்கையில் குளியல் முடித்து, பயபக்தியோடு சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றி பூசை செய்கிறார்கள் தெரியுமா? இவர்கள் எல்லாம் ஹிந்துக்களா, இல்லையா என்பதற்கு ஒரு விவாதம் தேவையா? இதுபோன்ற சர்ச்சையால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. மதம், தர்மம் என்பது வேறு. இனம் என்பது வேறு. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.

பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்ட ஒரு விவாதத்தில் ஆதி சங்கரரிடம் 'நீங்கள் யார்?' என ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் இன்றைய கேரளாவில் பிறந்தவர் என்பதைக் குறிக்கும் வகையில், 'நான் ஒரு திராவிட சிசு' எனப் பதிலளித்திருந்தார்.' என்று தெரிவித்துள்ளார் பாஜக பேரறிமுகர் சுப்பிரமணியன்சாமி.

இந்த ஹிந்து சர்ச்சையால் லாபம் பெறுவது பாஜகவா? திமுகவா? என்பதற்கு, 'இதில் யாருக்கும் லாபம் கிடைக்காது. இப்போது இருக்கிற நிலைமையில், மற்ற மாநிலங்களில் பேசுவது போல் தமிழகத்திலும் ஹிந்து மத உணர்வுகளின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டுமா? கூடாதா? எனக் குழப்பத்தில் உள்ளது பாஜக. ஏனெனில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தாங்கள் ஹிந்துக்கள் என்ற உணர்வோடு இதுவரை வாக்குகளை பதிவு செய்யவில்லை. இவர்களது கோயில் போன்ற சிக்கல்களில் கூட நான்தான் அறங்கூற்றுமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகிறேன். அதற்காகவே ஹிந்துக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஹிந்து எனும் அரசியலை வைத்து லாபம் தேட முடியும் என்று திமுக நம்புகிறது. அவர்களுக்கும் அந்த வியூகம் பலன் தராது' என்றும் தெரிவித்துள்ளார் பாஜக பேரறிமுகர் சுப்பிரமணியன்சாமி.

தமிழ்நாட்டில் அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் எதை நோக்கிச் செல்கிறது? என்பதற்கு, 'அண்ணாமலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னைக் கேட்டால் பாஜக தமிழ்நாட்டில் சரியான பலத்தோடு இருக்கா, இல்லையா? என்பதே தெரியவில்லை. இதற்கு அண்ணாமலை மட்டும் காரணம் என்றாக முடியாது. தமிழ்நாட்டில் பாஜக முதல்வர் அத்தனை எளிதாக வந்துவிட முடியாது. முதலில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து நின்று 5 தொகுதிகளில் வென்று காட்டட்டும்.' என்று தான் சார்ந்த கட்சியான பாஜகவிற்கு ஒரு வேலைப்பணியை (டாஸ்க்) தெரிவிக்கிறார் பாஜக பேரறிமுகர் சுப்பிரமணியன்சாமி.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,402.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.