Show all

இணையப்பகடி! பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்

பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று பதிவிட்டு பகடியாடி வருகின்றனர் இணைய ஆர்வலர்கள். அவரின் கண்டுபிடிப்பு செய்தி இந்தக் கட்டுரையில்.

30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கவின் ஒற்றை டாலருக்கு கொடுக்க வேண்டிய இந்தியப் பணம் ரூபாய் 82.42 ஆக வளர்ந்து, இந்தியப் பணத்தின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க ஒன்றிய வங்கி வட்டி விழுக்காட்டை உயர்த்தியது உள்ளிட்ட காரணங்கள் பொருளாதார வல்லுனர்களால், இந்தப்பாட்டிற்குத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த இந்தியக் கட்டுபாட்டு வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. 

இதற்கிடையே, அமெரிக்கா சென்றுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதிய மாநாட்டில் பங்கேற்றார். அதன் பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், தெரிவித்த சப்பைக்கட்டு இணைய ஆர்வலர்களால் பேரளவாக பகடியாடப்பட்டு வருகிறது.

'இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால் தான் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவில்தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்' என தெரிவித்து அசத்தியது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின், நோபல் பரிசுக்கு இணைய ஆர்வலர்கள் பரிந்துரைத்த வகைக்கான அந்தச் சப்பைக்கட்டு ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,404.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.