Show all

செய்தியாளர்கள் மீது தாக்குதல் முன்னெடுத்த பாஜகவினர்! செய்தியாளர்கள் கண்டனம்

தமிழ்நாட்டில் செய்தியாளர்களைப் பாஜகவினர் கொச்சைப்படுத்திப் பேசுவதும் தாக்குதல் முன்னெடுப்பதும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. செய்தியாளர்களை நேற்று பாஜகவினர் தாக்கிய முன்னெடுப்புக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

27,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: செய்தியாளர்களை நேற்று பாஜகவினர் தாக்கிய முன்னெடுப்புக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் செய்தியாளர்களைப் பாஜகவினர் கொச்சைப்படுத்திப் பேசுவது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அண்மையில் பேட்டி ஒன்றின் போது பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை கடுமையாக இழிவுபடுத்தியிருந்தார். 

தலைமைஅமைச்சர் மோடியின் வருகையின் போது சாலை நடுவே கொடி கம்பங்களை நட்டது ஏன் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை விடையளிக்க முயலாமல், அந்த செய்தியாளர்களைத் தாக்கி பேசினார். 

உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வர வேண்டிய 200 ரூபாய் வந்துவிடும் என்று அண்ணாமலை செய்தியாளர்களை இழிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர் கேள்வி எழுப்ப எழுப்ப, உங்களுக்கு 1000 ரூபாய் வந்துவிடும், 2000 ரூபாய் வந்துவிடும் என்று கூறிக்கொண்டே சென்றார் அண்ணாமலை. 

அண்ணாமலையின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் பல இதழியலாளர்கள் அவருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தனர். அண்ணாமலையின் பேச்சுக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களை மேற்கொண்டன. 

தற்போது அமெரிக்கா சென்றுவிட்டு அண்ணாமலை சென்னை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தப் பேட்டிக்கு பின்பாக அங்கு இருந்த பெண் நிர்வாகி ஒருவர் மயக்கம் அடைந்து விழுந்தார். இதை புகைபடம் எடுப்பதற்கு முயன்ற செய்தியாளர்களைப் பாஜகவினர் தாக்கினர். 

ஏய் போ போ என்று கத்தி கூச்சலிட்டுக் கொண்டே தாக்குதல் நடத்தினர். செய்தியாளர்களைப் பார்த்து சில பாஜகவினர் கொச்சையான சொல்லாடலை முன்னெடுத்தனர். இந்த நிலையில் பாஜகவினரின் செயலுக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கண்டனத்தில், பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை தாக்க முயன்று, கீழ்த்தரமாக பேசிய பாஜக குண்டர்களை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்கதையாகியுள்ள இந்தப்போக்கு நிறுத்தப்பட வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை தற்போதைய மற்றும் முந்தைய நிகழ்வுகளில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கண்டனம் தெரிவித்தனர். 

இதற்கு முன் செய்தியாளர்களைப் பாஜகவினர் மோசமாக நடத்திய காணொளிகளையும் அந்த அமைப்பு பகிர்ந்து உள்ளது. பாஜகவினரின் இந்த அடாவடிக்கு அண்ணாமலை தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற நிர்வாகிகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சார்பாக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். தவறிழைத்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,401.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.