Show all

இராசராச சோழன் பிறந்த, 1033வது சதயநாள்மீன் விழா! ஐப்பசி இரண்டு, மூன்று ஆகிய நாட்களில் நடத்த இன்று கொடியேற்றம்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராசராச சோழனின் 1033வது பிறந்த நாள் விழா ஐப்பசி இரண்டு, மூன்று ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று தஞ்சை பெரிய கோவிலில் கோடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

60ஆண்டுகளுக்கு பிறகு இராசராச சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்ட நிலையில் நடைபெறும் முதலாவது சதய விழா என்பதால், அது சிறப்பாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விழாவின் முதல் நாளில் கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 2வது நாள் நிகழ்ச்சியாக அரசு சார்பில் இராசராச சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராசராச சோழனின் 1033வது பிறந்த சதய நாள்மீன் விழா இந்த ஆண்டும் தஞ்சையில் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. உலக புகழ் பெற்று விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் இராசராச சோழன் ஐப்பசி மாதம் சதயம் நாள்மீனில் பிறந்தவர். அவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

இராசராச சோழனின் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் பொற் காலமாக கருதப்படுகிறது. குடவோலை முறையை கொண்டு வந்து இன்றைய தேர்தலுக்கு அன்றே வித்திட்டவர் இராசராச சோழன். நாவாய் ஓட்டி கடல் வணிகத்திலும் சிறந்து விளங்கினார். இது அன்றைய காலகட்டத்தில் உலக அளவில் எந்த ஒரு மன்னரும் செய்யாத சாதனை ஆகும். 

இராசராச சோழன் கட்டிய உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில், கட்டிட கலையிலும் இராசராச சோழன் சிறந்து விளங்கியதற்கு அடையாளமாக திகழ்கிறது. எனவேதான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவரது பிறந்தநாளை சதய நாள்மீன் விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். 

இராசராச சோழனின் சதய நாள்மீன் விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெருவுடையார் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூசைகளும் நடைபெறும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,934.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.