Show all

கருப்புக் கொடி ஏந்தியபடி, மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டி மீனவர் குடும்பங்கள் பேரணி

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் வீசியபோது கடலுக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளியில் சிக்கி மாயமாகி விட்டனர்.

குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களின் படகுகளும் மாயமாகி விட்டன.

இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் ஒக்கி புயலில் சிக்கி 254 படகுகள் கரை திரும்பவில்லை. இதில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மாயமான மீனவர்களை இந்திய கடற்படை, கடலோர காவல்படை வீரர்கள் தேடி வந்தனர். இதில் மராட்டியம், கோவா, குஜராத் மற்றும் லட்சத்தீவுகளில் குமரி மீனவர்களின் படகுகள் கரை ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோல கேரள கடல் பகுதியில் இறந்து போன மீனவர்களின் உடல்களும் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதுவரை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்களும், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால் புயலில் சிக்கி இறந்த மீனவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயிர் தப்பிய மீனவர்கள் பலரும் இதனை உறுதி செய்து வருகிறார்கள். தங்களோடு படகில் வந்த பலரும் கண் முன்பு கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்கள் மூலம் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று மீனவ அமைப்பினர் கூறுகிறார்கள்.

ஆனால் மாயமான மீனவர்கள் பற்றி அரசு தெரிவிக்கும் தகவல்களில் முரண்பாடு இருப்பதாக மீனவர்கள் கூறினர். எனவே ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆய்வு முடிந்த பின்பே மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

அண்டை மாநிலமான கேரளாவில் ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் பணியும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

பலியான மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறது. இதுபோல தமிழக அரசும் நிவாரண நிதி வழங்க வேண்டும், மாயமான மீனவர்களை தேடும் பணியை முடுக்கி விட வேண்டுமென்று மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி இன்று குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் இன்று சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடை பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை சென்று அங்கு தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட போவதாகவும் அறிவித்தனர்.

இதில், மேற்கு மாவட்ட கடற்கரை கிராமமக்கள், பெண்கள், மாயமான மீனவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிரியார்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியபடி, மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

மீனவர்களின் திடீர் போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும், மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் கடற்கரை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

பகல் 11.30க்கு குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் குளச்சல் சென்றார். அங்கு ஓகி புயலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற அவரை, ‘தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை’ என குற்றம்சாட்டி மீனவர்கள் முற்றுகை இட்டனர். இதனால் ஆளுனர் தனது நிகழ்ச்சியை அவசரமாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

நண்பகல் 12.00க்கு குழித்துறை ரயில் நிலையத்தை வந்தடைந்த சுமார் பத்தாயிரம் மீனவர்கள் அங்கு முற்றுகையிட்டு தொடர்வண்டி மறியல் நடத்துகிறார்கள். அவர்களுடன் அரசியல் கட்சி பிரமுகர்களும் இணைந்திருக்கிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் பதற்றம் நிலவுகிறது.

நேற்று ஒகி புயலை பேரிடராக அறிவிக்கலாமா என்பது குறித்து, நடுவண், மாநில அரசுகளுக்கு உயர் அறங்கூற்று மன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியிருந்நது நினைவு கூறத்தக்கது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,629

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.