Show all

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை அகற்றக்கோரி ராமசாமி என்கிற நபர் வழக்கு

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் செயலலிதா சமாதிகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் ராமசாமி என்கிற நபர் ஒருவர் பதிகை செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் செயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் ரூ.15 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடற்கரை ஒழுங்குமுறை விதிகளின்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் எந்த கட்டிடமும், சமாதியும் கட்டக் கூடாது. கடற்கரையின் அழகை பாதுகாப்பதற்காக இந்த விதி வகுக்குப்பட்டுள்ளது.

ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு நினைவு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது முன்னாள் முதல்வர் செயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இது கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்தின் விதிகளுக்கு முரணானது.

எனவே இந்த 3 நினைவு மண்டபங்களையும் அங்கிருந்து கோட்டூர்புரம் அருகில் உள்ள காந்தி மணிமண்டப வளாகத்துக்கு மாற்ற வேண்டும். மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. இதுபோன்ற நினைவு மண்டபங்கள் இருந்தால் மக்கள் கூடத்தான் செய்வார்கள். எனவே நினைவு மண்டபங்களை காந்தி மண்டப வளாகத்துக்கு மாற்றுமாறு உயர் அறங்கூற்றுமன்றம்; உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு தலைமை அறங்கூற்றுவர்கள் இந்திரா பானர்ஜி, எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் பிரிவு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அறங்கூற்றுவர்கள், ‘இந்த மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று அறிக்கை அனுப்ப உத்தரவிட்டனர்.

-உலகத்தின் இரண்டாவது நீளமான அழகிய கடற்கரைக்கு 144 தடை உத்தரவு! அந்த தடை உத்தரவை காப்பாற்ற அண்ணாவின் சமாதி, மண்டபங்களை அகற்றவேண்டும் என்னங்கடா நடக்குது தமிழ்நாட்டில்!

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,605

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.