Show all

வெள்ளம் வடிந்த பின்பு செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்: இணை ஆணையர்

வெள்ள  நீரோடு வீடுகளுக்குள் விஷப்பாம்புகள் புகுந்து இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெள்ளம் வடிந்த பின்பு செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும் பற்றிய விவரம் வருமாறு:

பாதுகாப்பான நிலை திரும்பும் வரை வௌ;ளம் வடிந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்.

வெள்ளநீர் வடிந்த பின்னரும் ஆற்றங்கரைக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.

வெள்ளம் புகுந்த கட்டிடத்திற்குள் செல்லும் முன் அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும்.

கட்டிடத்திற்குள் வெள்ளநீர் இருந்தால், உள்ளே நுழையக் கூடாது.

வெள்ளத்திற்கு பின்பு கட்டிடத்திற்குள் நுழையும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கட்டிட கட்டமைப்பில் விரிசல் மற்றும் சேதம் உள்ளதா என பரிசோதிக்கவும்.

அனைத்து சுவர்கள், தரைப் பகுதி, மேற்கூரை கதவு மற்றும் ஜன்னல்களை ஆய்வு செய்யவும். இதனால் கட்டிடம் இடிந்து விழுவதற்கான வாய்ப்பை முன்கூட்டியே அறிந்து, அதனால் ஏற்படும் ஆபத்தையும் அறிந்து செயல்பட வேண்டும்.

கட்டிடத்திற்குள் உள்ள மின் இணைப்புகள், தரையிலிருக்கும் அடுப்புகள் கொதிகலன்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் மோட்டார் பம்பு போன்ற இதர மின் உபகரணங்களை முறையாக சோதனை செய்ய வேண்டும்.

வடிகால் அமைப்பில் உடைப்பு ஏற்பட்டு இருக்குமாயின் கழிப்பறை மற்றும் குழாய் தண்ணீர் உபயோகத்தை நிறுத்தி விடவும்.

கழிவுநீர் குழாயமைப்பில் சேதம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக சரிசெய்வதன் மூலம் நோய் பரவுவதை தவிர்க்கலாம்.

வெள்ள நீரோடு கொடிய பூச்சிகள் மற்றும் விஷப்பாம்புகளும் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.

வெள்ளநீரில் நனைந்த மருந்துகள், உணவு மற்றும் தண்ணீர் (அது அடைக்கப்பட்ட பண்டங்கள்) போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

மின் உபகரணங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால் மின் இணைப்பை உடன் துண்டிக்கவும்.

கொதிக்க வைத்து, குளோரின் கலந்த பாதுகாப்பான தண்ணீரையே பருகவும்.

பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான பாதைகளையே உபயோகிக்கவும், வேடிக்கை பார்ப்பதை தவிர்க்கவும்.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள், மண்சரிவுகள், கீழே விழுந்த மரங்கள் மற்றும் அறுந்து விழுந்த மின் இணைப்புகளை கவனத்தில் கொள்ளவும்.

தாழ்வான மின் கம்பிகள் அருகே செல்லக் கூடாது.

உறுதியான காலணிகள் அணிந்து, வெட்டுக் காயங்களிலிருந்து கால்களைப் பாதுகாக்கவும்.

சேதமடைந்த குடிநீர் குழாய் வடிகால் அமைப்பு மற்றும் மின் இணைப்பு குறித்து, உரிய அதிகாரிகளிடம் உடன் புகார் செய்யவும்.

கட்டிடத்திற்குள் வெளி காற்று புகுமாறு செய்தும், நச்சு வாயுகள் மற்றும் துர்நாற்றாத்தை போக்கவும்.

சேதமுற்ற கட்டிடம் மற்றும் அதன் அனைத்துப் பகுதிகளையும் புகைப்படம் எடுக்கவும். (காப்பீடு இருப்பின் பெறுவதற்கு உதவும்).

சிறிய காயங்களையோ, நோய் அறிகுறிகளையோ அலட்சியப்படுத்தக்கூடாது தேவையான மருத்துவ உதவியை உடனடியாக நாடவும்.

எரிவாயு இணைப்பு அணைக்கப்பட்டு இருக்குமாயின் மீண்டும் அடுப்ப பற்றவைக்கும் முன் அதிக கவனம் தேவை.

வௌ;ளப்பகுதியில் குழந்தைகள் விளையாடுவதை தடைசெய்ய வேண்டும்.

வெள்ளநீரில் நனைந்த அனைத்துப் பொருட்களையும் சுத்தப்படுத்தியும் தேவை எனில் கிருமி நீக்கியும் பயன்படுத்தவும்.

பொருள்களை பழுது நீக்கம் செய்யும் போது எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளவும்.

உள்ளூர் கட்டிட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும். கட்டுமானத்தின் போது வௌ;ளத்தை தாங்கும் திறன் கொண்ட உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்த வேண்டும்.

மின் உபகரணங்களை, சாத்தியமான வெள்ளம் பாதிக்கும் வாய்ப்புள்ள உயரத்திற்கு மேலாக பொருத்தி வைக்கவும்.

எதிர்பார்க்கப்படும் வெள்ளம் பாதிக்க வாய்ப்புள்ள உயரத்திற்கு மேல் வீட்டு மின் உபகரணங்களை பொருத்தி வைக்கவும். கட்டிடத்தில் முழுமையான பாதுகாப்பு நிலையினை உறுதி செய்யவும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.